தெற்கு ஆசியாவில் முதல்முறையாக இரவு நேர சாலை ஃபார்முலா 4 கார் பந்தயம் இன்று (ஆகஸ்ட் 31) சென்னையில் தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது. தமிழக விளையாட்டுத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
ஆகஸ்ட் 31-ல் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீங் ஆகிய பந்தயங்களின் பயிற்சி சுற்றுகளும், தகுதிச் சுற்றுகளும் நடைபெறுகின்றன. செப்டம்பர் 1-ல் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீங் ஆகிய பந்தயங்களின் இறுதிச் சுற்றுகள் நடைபெறுகின்றன.
ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயம் தனி நபராகவும், இந்தியன் ரேசிங் லீங் பந்தயம் அணியாகவும் நடைபெறுகிறது. இந்தப் பந்தயங்களில் சென்னை டர்போ ரைடர்ஸ், கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங், ஸ்பீடு டெமான்ஸ் டெல்லி, பெங்களூரு ஸ்டெஸ்டர்ஸ், ஷ்ராச்சி ராஹ் பெங்கால் டைகர்ஸ், ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ், அகமதாபாத் ரேசர்ஸ், காட்ஸ்பீடு கொச்சி ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன.
சென்னை டர்போ ரைடர்ஸ் அணியில் இந்திய வீரர்களான சந்தீப் குமார், முகமது ரியான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த பந்தயத்தில் போர்ச்சுக்கல், செக் குடியரசு, இங்கிலாந்து, பெல்ஜியம், டென்மார்க், சுவிட்ஸர்லாந்து, ஸ்பெயின், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் கலந்துகொள்கின்றனர்.
3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கார் பந்தைய சர்க்யூட் தீவுத்திடலில் தொடங்கி, போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை ஆகியவற்றில் பயணித்து இறுதியில் தீவுத்திடலில் முடியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது தெற்காசியாவிலேயே மிக நீளமான சர்க்யூட் ஆகும்.