முன்னாள் டிஜிபி மீது வழக்குப்பதிவு, வீட்டுக்கு மின் விநியோகம் நிறுத்தம்: என்ன பிரச்னை?

மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரிகள் மே 19-ல் ராஜேஷ் தாஸ் வீட்டுக்கான மின் விநியோகத்தைத் துண்டிக்கச் சென்றுள்ளார்கள்.
எரிசக்தித் துறைச் செயலாளர் பீலா வெங்கடேசன்
எரிசக்தித் துறைச் செயலாளர் பீலா வெங்கடேசன்ANI

வீட்டுக் காவலாளியைத் தாக்க முயன்றதாக எரிசக்தித் துறைச் செயலாளர் பீலா வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எரிசக்தித் துறைச் செயலாளர் பீலா வெங்கடேசனின் முன்னாள் கணவர் ராஜேஷ் தாஸ். ராஜேஷ் தாஸ் முன்னாள் சிறப்பு டிஜிபி. தனக்குக் கீழ் பணியாற்றிய பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் விழுப்புரம் நீதிமன்றம் ராஜேஷ் தாஸை 2023-ல் குற்றவாளியாக அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, தனக்கு விதக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரியும், காவல் துறையிடம் சரணடைவதிலிருந்து விலக்கு கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் இரு மனுக்களைத் தாக்கல் செய்தார் ராஜேஷ் தாஸ். இந்த இரு மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 17-ல் ராஜேஷ் தாஸைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், சென்னை தையூரிலுள்ள தன் வீட்டுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதாக ராஜேஷ் தாஸ் குற்றம்சாட்டினார். இதற்கு தனது முன்னாள் மனைவி பீலா வெங்கடேசனை அவர் காரணம் கூறினார்.

இதுதொடர்பாக, டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான செய்தியின்படி, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அதிகாரிகள் மே 19-ல் ராஜேஷ் தாஸ் வீட்டுக்கான மின் விநியோகத்தைத் துண்டிக்கச் சென்றுள்ளார்கள். எனினும், ராஜேஷ் தாஸ் இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, மின் விநியோகத்தைத் துண்டிப்பதற்கான எரிசக்தித் துறைச் செயலாளரின் கடிதத்துடன் மீண்டும் மே 20-ல் ராஜேஷ் தாஸ் வீட்டுக்குச் சென்றுள்ளார்கள் அதிகாரிகள்.

மின் விநியோகத்தைத் துண்டிப்பதற்கு முன்பு வீட்டில் வசிக்கும் என்னுடைய கருத்தைக் கேட்டிருக்க வேண்டும். காரணம், மின் விநியோகத்தைத் துண்டிக்க எந்த நிலுவைத் தொகை புகார் எதுவும் இல்லை, நீதிமன்ற உத்தரவும் இல்லை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் ராஜேஷ் தாஸ் பேசியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசிய பீலா வெங்கடேசன், கடந்த மூன்று மாதங்களாக இந்த வீடு காலியாக உள்ளது. மின் இணைப்பும், இடமும் தன்னுடையப் பெயரில் இருப்பதால் தேவையில்லாமல் மின் கட்டணம் செலுத்த வேண்டாம் என்பதால் மின் விநியோகத்தைத் துண்டிக்க முடிவு செய்தேன் என்று பீலா வெங்கடேசன் கூறியிருக்கிறார்.

மேலும், வீட்டில் வசித்து வருவதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்கச் சொல்லி உரிய அவகாசம் வழங்கியும், அவர் எதையும் சமர்ப்பிக்கவில்லை. எனவே, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரிகள் அவர்களுடையப் பணியைச் செய்துள்ளதாக பீலா வெங்கடேசன் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ராஜேஷ் தாஸ் தனது ஆதரவாளர்களுடன் தையூரிலுள்ள தன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டுக் காவலாளியைத் தாக்கியதாக பீலா வெங்கடேசன் புகாரளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் கேளம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.

பீலா வெங்கடேசன் தொடர்ந்து விவாகரத்து மனு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in