முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்குப் பிணை

சென்னை தையூரிலுள்ள தன் வீட்டுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதாக ராஜேஷ் தாஸ் குற்றம்சாட்டியிருந்தார்.
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்குப் பிணை

வீட்டுக் காவலாளியைத் தாக்க முயன்றதாக எரிசக்தித் துறைச் செயலாளர் பீலா வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தையூரிலுள்ள தன் வீட்டுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதாக ராஜேஷ் தாஸ் குற்றம்சாட்டினார். இதற்கு தனது முன்னாள் மனைவி பீலா வெங்கடேசனை அவர் காரணம் கூறினார்.

இதுதொடர்பாக, டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான செய்தியின்படி, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அதிகாரிகள் மே 19-ல் ராஜேஷ் தாஸ் வீட்டுக்கான மின் விநியோகத்தைத் துண்டிக்கச் சென்றுள்ளார்கள். எனினும், ராஜேஷ் தாஸ் இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, மின் விநியோகத்தைத் துண்டிப்பதற்கான எரிசக்தித் துறைச் செயலாளரின் கடிதத்துடன் மீண்டும் மே 20-ல் ராஜேஷ் தாஸ் வீட்டுக்குச் சென்றுள்ளார்கள் அதிகாரிகள்.

மின் விநியோகத்தைத் துண்டிப்பதற்கு முன்பு வீட்டில் வசிக்கும் என்னுடைய கருத்தைக் கேட்டிருக்க வேண்டும். காரணம், மின் விநியோகத்தைத் துண்டிக்க எந்த நிலுவைத் தொகை புகார் எதுவும் இல்லை, நீதிமன்ற உத்தரவும் இல்லை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் ராஜேஷ் தாஸ் பேசியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசிய பீலா வெங்கடேசன், கடந்த மூன்று மாதங்களாக இந்த வீடு காலியாக உள்ளது. மின் இணைப்பும், இடமும் தன்னுடையப் பெயரில் இருப்பதால் தேவையில்லாமல் மின் கட்டணம் செலுத்த வேண்டாம் என்பதால் மின் விநியோகத்தைத் துண்டிக்க முடிவு செய்தேன் என்று பீலா வெங்கடேசன் கூறியிருக்கிறார்.

மேலும், வீட்டில் வசித்து வருவதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்கச் சொல்லி உரிய அவகாசம் வழங்கியும், அவர் எதையும் சமர்ப்பிக்கவில்லை. எனவே, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரிகள் அவர்களுடையப் பணியைச் செய்துள்ளதாக பீலா வெங்கடேசன் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ராஜேஷ் தாஸ் தனது ஆதரவாளர்களுடன் தையூரிலுள்ள தன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டுக் காவலாளியைத் தாக்க முயன்றதாக பீலா வெங்கடேசன் புகாரளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் கேளம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.

இதன் அடிப்படையில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, திருப்போரூர் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் ஆஜர்படுத்தப்பட்டார். ராஜேஷ் தாஸின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு அவருக்குப் பிணை வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in