
முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாள் நூற்றாண்டை ஒட்டி, `வலதுசாரிக் கருத்தியல் கொண்டிருந்தாலும் மதச்சார்பின்மை பண்பை பேணிக்காத்தவர் வாஜ்பாய்’ எனப் பதிவிடுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
25 டிசம்பர் 1924-ல் அன்றைய குவாலியரில் பிறந்த வாஜ்பாய், ஆர்ய சமாஜ் இயக்கத்தின் இளைஞர் அமைப்பில் தீவிரமாகப் பணியாற்றி, பின்னர் அதன் பொதுச் செயலாளராக உயர்ந்தார். இதற்கிடையே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும் தன்னை ஈடுபத்திக்கொண்டார்.
சுதந்திரத்திற்குப் பிறகு பாரதிய ஜன சங்கம் சார்பில் உ.பி.யின் பல்ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்கு முதல் முறையாகத் தேர்வானார். பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த எமர்ஜென்சியை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தை முன்னெடுத்த முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்தார் வாஜ்பாய்.
இதனை அடுத்து 1977-ல் அமைந்த ஜனதா கட்சி ஆட்சியின்போது வெளியுறவு அமைச்சராக அவர் பணியாற்றினார். ஜனதா கட்சி ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு பாரதிய ஜனதா கட்சியைத் தொடங்கியதில் முக்கியப் பங்காற்றினார் வாஜ்பாய். அதன்பிறகு 1996-ல் முதல் முறையாக இந்திய பிரதமரான வாஜ்பாய் 17 நாட்கள் மட்டும் அப்பதவியில் இருந்தார்.
இதைத் தொடர்ந்து 1998 முதல் 2004 வரை சுமார் 6 ஆண்டுகள் மீண்டும் பிரதமர் பதவியை வகித்தார் வாஜ்பாய். தன் ஆட்சிக்காலத்தின்போது தங்க நாற்கர சாலை உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய வாஜ்பாய், கடந்த 16 ஆகஸ்ட் 2018-ல் தன்னுடைய 93 வயதில் காலமானார்.
அவரது பிறந்தநாளான டிச.25, மத்திய அரசால் `நல்லாட்சி தினமாகக்’ கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், வாஜ்பாய் பிறந்தநாள் நூற்றாண்டு தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டவை பின்வருமாறு,
`முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நூறாவது பிறந்தநாளில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பினையும், நமது தலைவர் கலைஞருடன் அவர் கொண்டிருந்த நட்புறவினையும் நினைவுகூர்கிறோம். வலதுசாரிக் கருத்தியல் கொண்டவராக இருந்தாலும், பிரதமர் பொறுப்பில் இருந்தபோது நாட்டின் மதச்சார்பின்மைப் பண்பை அவர் பேணிக்காத்தார். அவரது வாழ்வும் பணியும் நிலைத்து நிற்கும்’ என்றார்.