தவெகவில் இணைந்தது ஏன்?: செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு | KA Sengottaiyan |

திமுகவோ, பாஜகவோ, மற்ற கட்சிகளோ யாரும் என்னைச் சந்திக்கவில்லை...
தவெகவில் இணைந்தது ஏன்?: செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு
தவெகவில் இணைந்தது ஏன்?: செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு
2 min read

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது ஏன் என்பது குறித்து விளக்கமளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பாஜகவோ திமுகவோ யாரும் தன்னைச் சந்திக்கவில்லை என்று தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததற்குப் பிறகு, பனையூர் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருடன் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் உடனிருந்தனர். அப்போது செங்கோட்டையன் கூறியதாவது:-

“பத்திரிகை நண்பர்களுக்கு என் வாழ்த்துகள். இரண்டு நாள்களாக நீண்க்கள் படும் பாடுகளை நான் பார்த்தேன். என்னைப் பின் தொடர்வது கஷ்டம் என்று தெரிந்தும், பின்னாலேயே தொடர்ந்து துரத்திப் பிடித்துச் செய்திகளை வெளியிட்டீர்கள். உங்களுக்கு என் வாழ்த்துகள்.

அதிமுகவில் எம்ஜிஆரால் அடையாளம் காட்டப்பட்டவன். 1972-ல் அதிமுக தொடங்கியபோது எம்ஜிஆருக்குப் பின்னால் திரண்டிருந்த தொண்டர்களில் நானும் ஒருவன். 1975-ல் கோவையில் பொதுக்குழு நடந்தபோது அந்தப் பணிகளை எம்ஜிஆர் பாராட்டும் அளவு செய்து முடித்தேன். அப்போது எதிர்க்கட்சியினர் அதிமுக என்ற கட்சி 100 நாள்கள் கூட நிலைக்காது என்றார்கள். ஆனால் எம்ஜிஆர் 3 முறை முதலமைச்சராக அமர்ந்தார். அவரது மறைவுக்குப் பின் அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது. அப்போது நான் ஜெயலலிதா வழியில் பயணித்தேன். அவருடைய சுற்றுப் பயணம் தொடங்கி பல்வேறு பணிகளில் நான் உடனிருந்திருக்கிறேன். “இமயமே தலையில் விழுந்தாலும் அயராமல் உழைப்பவர் செங்கோட்டையன்” என்று என்னை ஜெயலலிதா பாராட்டினார். ஆனால் இன்று அதிமுக இருக்கும் நிலை வேறு. ஏனென்றால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆட்சி நடத்தினோம். ஆனால், கட்சி மூன்றாகப் பிரிந்தது. அதையடுத்து அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று நாங்கள் கருத்துகளை வெளியிட்டோம். ஆனால் அது பரிமாறப்பட்டதே தவிர, செயல்படுத்தப்படவில்லை.

இந்நேரத்தில் ஒரு கருத்தைச் சொல்ல விரும்புகிறேன். ‘நான் என்று ஒருவன் நினைத்தால், ஆண்டவன் தான் என்று கண்டித்துவிடுவான். அவன் பார்த்துக்கொள்வான்’. இதுதான் இன்றைய சூழல். அப்படித்தான் என்னைப் பொறுப்புகளிலிருந்து நீக்கினார்கள். பின்னர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவே திட்டமிட்டு தேவர் ஜெயந்தியில் பங்கேற்றேன். அப்போது என்னை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கிவிட்டார்கள். 50 ஆண்டுகால வரலாற்றில், அதிமுகவின் வளர்ச்சிக்கு உழைத்ததற்கான பரிசாகத்தான் என்னைக் கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார்கள். என்னை மட்டுமன்றி என் ஆதராவாளர்கள் உட்பட நான் துக்க வீட்டில் கலந்துகொண்ட காரணத்தால் அதிமுக தொண்டர் ஒருவரையும் கட்சியிலிருந்து நீக்கினார்கள்.

அதன்பிற்கு நான் தெளிவாக முடிவெடுத்து நேற்று சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து இன்று தவெகவில் இணைந்திருக்கிறேன். ஏனென்றால் இன்று திமுக வேறு, அதிமுக வேறு என்பதில்லை. தேர்தல் களத்தில் இருவரது செயல்பாடுகளும் அப்படித்தான் இருக்கிறது. எனது பயணம் என்பது தூய்மையாக ஆட்சி தமிழ்நாட்டில் மலர வேண்டும் என்பதே. அதற்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மாபெரும் இயக்கத்தை உருவாக்கி மக்கள் மனத்தில் இடம்பெற்றுள்ளார். அவரது தலைமையில் தமிழ்நாட்டில் புதிய மாற்றம் உருவாக்கப்பட வேண்டும். இந்தப் பயணம் என்பது மக்கள் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆகவே 2026-ல் மக்களால் வரவேற்கப்படுகிற, ஏற்றப்படுகிற, உருவாக்கப்படுகிற புனித ஆட்சி தமிழ்நாட்டில் உருவாக தவெக விஜய் வெற்றி பெறுவார்.

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று நான் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதிக்கவில்லை. ஐந்து நாள்களுக்குள் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்றுதான் சொன்னேன். ஆனால் என்னை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் நான் கெடு விதித்ததாக ஊடகங்களில் திரித்து எழுத வைத்து, திட்டமிட்டு காய் நகர்த்தியிருக்கிறார்கள். திமுகவோ, பாஜகவோ, தேசிய கட்சிகளோ, மாற்று கட்சிகளோ யாரும் என்னைச் சந்திக்கவில்லை. பேசவில்லை. நானும் அமைச்சர் சேகர் பாபுவும் சந்தித்ததாக படம் வெளியாகியிருக்கிறதா? நான் யாரையும் சந்திக்கவில்லை. நான் இதுவரை எந்தக் கட்சிக்கும் மாறியதில்லை. ஆனால் இப்போது தவெகவினர் புதிய மாற்றத்தைக் தருவதற்காக வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் வரவேற்பு இருக்கிறது” என்றார்.

Summary

Explaining why he joined the TVK Party, former minister Sengottaiyan said that no one from the BJP or the DMK met him.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in