எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த விஜயதரணி

மக்களவைத் தேர்தல் அறிவிப்புடன் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த விஜயதரணி
ANI
1 min read

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக சட்டப்பேரவைத் தலைவருக்கு விஜயதரணி கடிதம் எழுதியுள்ளார்.

விளவங்கோடு தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் மூன்று முறை சட்டப்பேரவைக்குத் தேர்வானவர் விஜயதரணி. கடந்த சில நாள்களாகவே, இவர் பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், தில்லியிலுள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் முன்னிலையில் அவர் நேற்று பாஜகவில் இணைந்தார்.

இதைத் தொடர்ந்து, விஜயதரணியைக் கட்சியிலிருந்து நீக்கிய காங்கிரஸ், அவரைத் தகுதி நீக்கம் செய்வது குறித்து சட்டப்பேரவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பியது. இதனிடையே, சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக சட்டப்பேரவைத் தலைவருக்கு விஜயதரணி நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

படம்: ஏஎன்ஐ

இதன்மூலம், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படவுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, மக்களவைத் தொகுதி/சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அறிவிக்கப்பட்டதிலிருந்து 6 மாத காலத்துக்குள் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்.

விஜயதரணி ராஜினாமாவைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தல் அறிவிப்புடன் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in