திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்: முதலமைச்சர் வரவேற்பு | O. Panneerselvam | DMK |

தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ள ஓ. பன்னீர்செல்வத்தை வருக வருக என வரவேற்கிறேன்...
திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்: முதலமைச்சர் வரவேற்பு
திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்: முதலமைச்சர் வரவேற்புhttps://x.com/mkstalin
2 min read

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது மகன் மற்றும் ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக பாஜகவுடனான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் அரசியல் நிலைப்பாடு பேசுபொருளாகி வருகிறது.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு, அமமுகவைத் தொடங்கிய டிடிவி தினகரன், பாஜகவுடனான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து கொண்டுள்ளார். சமீபத்தில் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். பண்ருட்டி ராமச்சந்திரன், சசிகலா இருவரும் புதிய கட்சி தொடங்கியுள்ளனர். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு, அதிமுக தொண்டர் மீட்பு குழு என்ற இயக்கத்தைத் தொடங்கிய முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சில மாதங்களாகத் தனது நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்தார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்களின் நிலை

இதற்கிடையில், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக இருந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவுக்கு சென்று விட்டனர். அதேபோல, கு.ப. கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் தவெகவில் இணைந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் தர்மர், மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுகவிலேயே சேர்ந்துகொண்டார். இதனால் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கும் சூழலுக்கு ஓ.பன்னீர்செல்வம் தள்ளப்பட்டார்.

முதலமைச்சரைப் புகழ்ந்த ஓபிஎஸ்

அப்போது, அவர் திமுகவில் சேர இருப்பதாக தகவல் வெளியாகி வந்தன. இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே, முதலமைச்சர் ஸ்டாலினைப் புகழ்ந்து பேசி வந்த அவர் அவ்வப்போது அவரைச் சந்தித்தும் வந்தார். இதற்கிடையில் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பன் சமீபத்தில் சட்டப்பேரவையில் திமுக ஆட்சியியையும் முதலமைச்சர் ஸ்டாலினையும் புகழ்ந்து பேசியது சர்ச்சையானது. அதற்குப் பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம் வரும் தேர்தலில் ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது என்று வெளிப்படையாகவே கூறினார்.

திமுகவில் இணைந்த ஓபிஎஸ்

இந்நிலையில் இன்று சென்னையில் காலை அமைச்சர் சேகர் பாபுவைச் சந்தித்துப் பேசிய ஓ. பன்னீர்செல்வம், அவருடன் அண்ணா அறிவாலயத்திற்குச் சென்றார். அங்கு அவருக்குத் திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதன்பின் முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் தன்னைத் திமுகவில் இணைத்துக் கொண்டார். அவரை ஆரத்தழுவி முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றார். அப்போது, அமைச்சர்கள் கே.என். நேரு, எவ வேலு, தங்கம் தென்னரசு, துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து, ஸ்டாலின் முன்னிலையில் திமுக உறுப்பினருக்கான படிவத்தில் ஓபிஎஸ் கையெழுத்திட்டார். அவருடன் அவரது மகனும் முன்னாள் எம்பியுமான ரவிந்திரநாத் மற்றும் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் உள்ளிட்ட ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்தனர்.

ஸ்டாலின் வரவேற்பு

ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ள நிலையில் அவரை வரவேற்று முதலமைச்சர் ஸ்டாலின் சமூக ஊடகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

“முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான ஓ.பன்னீர்செல்வம் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன். திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பாஜகவுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம், அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! வெல்வோம் ஒன்றாக!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Former Chief Minister O. Panneerselvam, who was expelled from the AIADMK, joined the DMK along with his son and supporters in the presence of Chief Minister Stalin.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in