மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவா?: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து நீக்கம்!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள மஞ்சங்கரணை பகுதியில் மும்மொழி கொள்கை ஆதரவு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவா?: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து நீக்கம்!
1 min read

கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ். விஜயகுமார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதற்கு, பாஜக சார்பில் நடைபெறும் மும்மொழிக் கொள்கை ஆதரவு கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டது காரணமாக கூறப்படுகிறது.

2005-2006 மற்றும் 2016-2021 என இரண்டு முறை கும்மிடிப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த அதிமுகவைச் சேர்ந்த கே.எஸ். விஜயகுமார், அக்கட்சியில் திருவள்ளூர் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளராகவும், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில் விஜயகுமாரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,

`கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமார், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

இந்நிலையில், விஜயகுமார் நீக்கத்திற்கு பாஜக நடத்திவரும் மும்மொழிக் கொள்கை கையெழுத்து இயக்கம் காரணமாக கூறப்படுகிறது.

தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக, பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் வகையிலான கையெழுத்து இயக்கத்தை தமிழக பாஜக கடந்த மார்ச் 5-ல் முன்னெடுத்தது.

இதை ஒட்டி, திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள மஞ்சங்கரணை பகுதியில் நேற்று (மார்ச் 7) மும்மொழி கொள்கை ஆதரவு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அப்போது, அவ்வழியாக காரில் சென்ற விஜயகுமார் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டார். இந்த விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் விஜயகுமார்.

இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த விஜயகுமார், `பாஜகவினர் அழுத்தம் கொடுத்து கையெழுத்திடச் சொன்னதால் கையெழுத்திட்டேன்; பொதுச்செயலாளரை சந்தித்து என் தரப்பு விளக்கத்தை அளிப்பேன்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in