
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு கோவை மாவட்டம் அன்னூரில் கடந்த பிப்ரவரி 9-ல் பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழக முதல்வராக அவர் இருந்தபோது, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக இந்த பாராட்டு விழா நடந்தது. ஆனால், அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் இந்த விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
விழா அழைப்பிதழ்கள் மற்றும் மேடையில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம்பெறாததால், தனது உணர்வை வெளிப்படுத்தும் வகையில் விழாவில் பங்கேற்கவில்லை என்று செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.
இதற்கிடையே, தலைநகர் தில்லியில் இந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து பேசினார் எடப்பாடி பழனிசாமி. மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் அதிமுக ஈடுபட்டதாக செய்தி வெளியானது.
ஆனால், அத்தகைய செய்திகளை அடியோடு மறுத்த எடப்பாடி பழனிசாமி தமிழக மக்கள் பிரச்னைகளைப் பேசவே அமித்ஷாவைச் சந்தித்தாக செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தார். இதன் தொடர்ச்சியாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தற்போது தில்லியில் உள்ளனர்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று தில்லி சென்றுள்ளதாகவும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர் சந்தித்துப் பேசவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.