குரங்கம்மை பாதிப்பு தொடர்பாக சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உலகளவில் குரங்கம்மை பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், உலகளவில் கடந்த 14 அன்று அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியது உலக சுகாதார அமைப்பு. இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் குரங்கம்மை பாதிப்புகள் இல்லையென மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா மற்றும் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்ச மா. சுப்பிரமணியன் ஆகியோர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மா. சுப்பிரமணியன் சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.
"உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா, இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு இல்லை என்பதை அறிவித்துள்ளார். தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என்பதை நேற்று நான் அறிவித்தேன்.
தமிழ்நாட்டிலுள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய சர்வதேச விமானங்களில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு குரங்கம்மைக்குரிய பாதிப்புகள் உள்ளதா என சுகாதாரத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்கிறார்கள். குரங்கம்மை பாதிப்பு குறித்த விழிப்புணர்வு விளம்பரப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. நாளை மறுநாள் நான் நேரடியாக ஆய்வு செய்கிறேன்" என்றார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.