
தந்தை பெரியாரின் நினைவு தினத்தை ஒட்டி, திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு பெரியாரின் கைத்தடி ஒன்றேபோதும் என உரை நிகழ்த்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தந்தை பெரியாரின் 51வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, இன்று (டிச.24) சென்னையில் உள்ள பெரியார் திடலில், பெரியார் எணினி நூலகம் மற்றும் ஆய்வு மையத்தைத் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
இதனைத் தொடர்ந்து, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, `பெரியாரின் கைத்தடியை’ முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசாக வழங்கினார். இதனை அடுத்து முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு,
`திராவிட மாடல் என்றால் என்ன என்று கேலி செய்துகொண்டிருப்பவர்களுக்கு இந்த கைத்தடி ஒன்றே போதும். தாய் வீட்டிற்கு வந்திருக்கிறேன். தாய் வீட்டுக்கு வரும்போதெல்லாம் நான் உணர்ச்சி எழுச்சியைத் தொடர்ந்து பெறுவது உண்டு.
காலங்காலமாக ஒடுக்கப்பட்டிருந்த தமிழினம் ஒற்றுமை பெறவும், சுயமரியாதை உணர்வு பெற்று மேலெழுந்து நிற்கவும் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு பல்வேறு தியாகங்களைப் புரிந்து, நம் இனத்திற்காக அயராது உழைத்திருக்கக் கூடிய ஈரோட்டுச் சிங்கம், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் மறைந்த இந்த நாளில் அவரது கருத்துகளை, எண்ணங்களை, போராட்டங்களை, தியாகங்களை நம் இளைய தலைமுறையிடம் எடுத்துச் செல்லும் வகையில் டிஜிட்டல் நூலகம் மற்றும் ஆய்வு மையம் இன்று திறக்கப்பட்டிருக்கிறது.
தந்தை பெரியார் தன் பயணத்தைத் முடித்துக்கொண்டார் நாம் தொடர்வோம் என்று கலைஞர் கூறினார். தந்தை பெரியாரின் தொண்டர்களாகிய நாம் அந்தப் பயணத்தைத் தொடங்கி, இந்த முன்னெடுப்பை செய்திருக்கிறோம்’ என்றார்.