அரசியல் என்ற பாம்பைக் கண்டு இந்த குழந்தைக்கு பயம் இல்லை என்று கூறி தவெகவின் முதல் மாநில மாநாட்டில் தன் உரையைத் தொடங்கினார் தவெக தலைவர் விஜய். அவர் மேலும் பேசியதாவது:
`ஒரு குழந்தை முதல் முதலில் அம்மா என்று சொல்லும்போது அந்த அம்மாவுக்கு சிலிர்ப்பு ஒன்று வரும் பாருங்கள். அந்த சிலிர்ப்பு எப்படி இருந்தது என்று அந்த அம்மாவிடம் கேட்டால் அந்த அம்மாவால் தெளிவாக விளக்கிக்கூற முடியும். ஆனால் அந்த உணர்வு எப்படி இருந்தது என்று அந்த குழந்தையிடம் கேட்டால் அந்த குழந்தை எப்படிக் கூறும்?
முதலில் அந்த குழந்தையால் எப்படிக் கூற முடியும்? குழந்தையிடம் எதைக் கேட்டாலும் பால் வாசம் மாறாத வாயுடன் மழலை தவழ வெள்ளந்தியாக சிரிக்க மட்டும்தானே தெரியும். அது உணர்ந்த அந்த சிலிர்ப்பை சிலாகித்து வார்த்தையில் கூறுவதற்கு அந்த குழந்தைக்குத் தெரியாது அல்லவா? அப்படி ஒரு உணர்வுடன்தான் உங்கள் முன்பு நான் நிற்கிறேன்.
ஆனால் அதே நேரத்தில் அம்மாவிடம் கூட தன்னுடைய உணர்வை சொல்லத் தெரியாமல் சிரிக்கிற அந்த குழந்தைக்கு முன்னாடி ஒரு பாம்பு வந்து படம் எடுக்கிறது என்றால் என்ன நடக்கும்? யார் முன்னால் அப்படி ஒரு பாம்பு வந்தாலும் அவர்கள் அலறி அடித்துவிட்டு ஓடுவார்கள். பாம்பை கண்டால் படையே நடுங்கும் என ஒரு பழமொழியே இருக்கிறது.
ஆனால் அந்த குழந்தை என்ன செய்யும் தெரியுமா? தன்னுடைய அம்மாவை பார்த்து சிரிக்கின்ற அதே சிரிப்புடன் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் சிரித்துக்கொண்டே அந்த பாம்பையும் கையில் பிடித்துக்கொண்டு விளையாடும். அப்படியென்றால் அந்த குழந்தைக்கு பாம்பைக் கண்டால் பயம் இல்லையா என்ற கேள்வியும் எழும்.
பாச உணர்வே என்னவென்று சொல்லத் தெரியாத அந்த குழந்தைக்கு பயம் என்றால் மட்டும் எப்படி சொல்லத் தெரியும்? இங்கே அந்த பாம்புதான் அரசியல். அதைக் கையில் பிடித்து விளையாட ஆரம்பிப்பதுதான் உங்கள்…. அரசியலுக்கு நாம் குழந்தை என்பது அடுத்தவர்களின் கருத்து. ஆனால் பாம்பாக இருந்தாலும் பயம் இல்லை என்பதுதான் நம்முடைய நம்பிக்கை.
பாம்பாக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும் கையில் எடுக்க வேண்டுமென்று முடிவு செய்ததற்குப் பிறகு தீவிரத்தன்மையுடன் கொஞ்சம் சிரிப்பையும் சேர்த்து செயல்படுவதுதான் நம்முடைய பாணி, நம்முடைய வழி. அப்படி செயல்பட்டால்தான் இந்தக் களத்தில் நிற்க முடியும். எதிரே நிற்பவர்களை சமாளிக்கவும் முடியும்' என்றார்.