இந்தியாவிலேயே முதல்முறையாக தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்காக பிரத்யேக தங்கும் விடுதி வளாகத்தை உருவாக்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின் என்று பேட்டியளித்துள்ளார் தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா.
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் - வடகால் கிராமத்தில் ரூ. 706.50 கோடி செலவில் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்காக பிரம்மாண்டமான குடியிருப்பு வளாகத்தை தமிழக அரசின் சிப்காட் நிறுவனத்தால் கட்டியுள்ளது. இந்த விடுதியால் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றும் 18,720 பெண் பணியாளர்கள் பயன்பெறவுள்ளனர்.
இன்று (ஆகஸ்ட் 17) மாலை இந்த விடுதி வளாகத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தைவானைச் ஃபாக்ஸ்கான் நிறுவனத் தலைவர் யாங் லியு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, `இது இந்தியாவிலேயே முதல் தொழில் குடியிருப்பு வளாகத் திட்டமாகும். தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்காக தனியாக ஒரு குடியிருப்பு வளாகத்தை உருவாக்கியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
இந்த குடியிருப்பு வளாக திட்டத்தை பொறுத்தவரை தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்காக நல்ல சூழலில் பாதுகாப்பான முறையில், அவர்கள் பணிபுரியும் இடத்துக்கு அருகிலேயே தங்கும் வகையில் 13 பிளாக்குகள் கட்டப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பிளாக்கிலும் 10 மாடிகள் இருக்கின்றன. இதில் தங்கும் பெண்களுக்காக அனைத்துவித வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன’ என்றார்.