மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் பட்டியலின சமூகங்களைச் சேர்ந்த 4 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று (செப்.29) சென்னை ஆளுநர் மாளிகையில், திமுகவைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்களுக்கு, அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதன்படி ஆர். ராஜேந்திரன், வி. செந்தில் பாலாஜி, கோவி. செழியன், சா.மு. நாசர் ஆகியோர் தமிழக அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
இதில், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் (தனி) தொகுதி எம்.எல்.ஏ.வான பட்டியலினத்தைச் சேர்ந்த கோவி. செழியனுக்கு உயர் கல்வித்துறை ஒதுக்கப்பட்டது. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு உயர் கல்வித்துறை ஒதுக்கப்பட்டதை வரவேற்றார் விசிக தலைவர் திருமாவளவன்.
தமிழக அமைச்சரவையில் ஏற்கனவே பட்டியலின சமூகங்களைச் சேர்ந்த 3 நபர்கள் அமைச்சர்களாக உள்ள நிலையில், கோவி. செழியன் அமைச்சரவையில் இணைந்தபிறகு இந்த எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே அதிகமாக 4 பட்டியலின அமைச்சர்களைக் கொண்ட பெருமையைப் பெற்றுள்ளது மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் (திட்டக்குடி), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் (ராசிபுரம்), மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் (தாராபுரம்) ஆகியோர் பட்டியலின சமூகங்களைச் சேர்ந்த பிற தமிழக அமைச்சர்களாகும்.