கொடுங்கையூர், பொன்னேரியில் செயல்படும் பிரபல ஹைதராபாத் பிரியாணி உணவகத்தின் கிளைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளார்கள்.
வடசென்னையில் உள்ள கொடுங்கையூரில் செயல்பட்டு வந்த பிரபல ஹைதராபாத் பிரியாணி உணவகத்தில் உணவு அருந்திய ஏறத்தாழ 40 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தண்டையார்பேட்டையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
இதுதொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறையிடம் புதன்கிழமை புகாரளிக்கப்பட்டது. உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவகத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினார்கள். உணவகத்தில் உணவு தயாரிக்கும் இடத்தில் சுகாதாரமற்ற சூழல் நிலவியதால் உணவுப் பாதுகாப்புத் துறை கடந்த வியாழக்கிழமை கடையை மூடி உத்தரவிட்டது.
இந்தக் கடைக்கு சீல் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொன்னேரியில் செயல்பட்டு வரும் இதே உணவகத்தின் மற்றொரு கிளையில் உணவு அருந்திய 5 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் செயல்பட்டு வரும் இந்த உணவகத்திலும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும், அலமாதியில் செயல்பட்டு வரும் பிரியாணி தயாரிப்புக் கூடத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கடையில் கெட்டுப்போன இறைச்சிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆய்வின் முடிவில் பொன்னேரி உணவகக் கிளைக்கும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தார்கள்.