
சாத்தான்குளத்தில் சாலையோரத்தில் இருந்த கிணற்றில் கார் விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வெள்ளாளன் விளையில் தூய பரிசுத்த ஆலய பிரதிஷ்டை விழா நடைபெறவிருக்கிறது. இதற்காக கோவையிலிருந்து 8 பேர் காரில் வந்துள்ளார்கள். மோசஸ் என்பவர் காரை ஓட்டியுள்ளார்.
சாத்தான்குளம் அருகே மீரான்குளத்தைக் கடக்கும்போது, மாலை 4 மணியளவில் காரின் கட்டுப்பாட்டை ஓட்டுநர் இழந்துள்ளார். இதில் சாலையோரத்திலிருந்து திறந்தவெளி கிணற்றில் விழுந்து கார் விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த ஷைனி கிருபாகரன் (26) மற்றும் எஸ்தர் (23) மட்டும் கார் கதவைத் திறந்து தப்பித்துள்ளார்கள். மற்றவர்கள் காருடன் சேர்ந்து கிணற்றில் விழுந்தார்கள். இவர்களில் ஹெர்ஷியான் என்பவர் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்ததாகவும் உள்ளூர் மக்கள் அவரைக் காப்பாற்றியதாகவும் சொல்லப்படுகிறது.
கிணற்றின் ஆழம் 50 அடி அளவுக்கு இருக்கும் என்பதால், காரில் பயணித்த மற்ற 5 பேரை காப்பாற்ற முடியாமல் போனது பெரும் சோகத்தில் முடிந்துள்ளது. இதில் ஒன்றரை வயது குழந்தையும் அடக்கம்.
உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், அவர்களுடைய குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நெல்லை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.