தமிழகத்தில் அமலுக்கு வந்தது மீன்பிடித் தடைக்காலம்: எப்போது தளர்வு?

மோட்டார் பொருத்தப்பட்ட செயற்கை இழைப் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவதில்லை.
காசிமேடு மீன் சந்தை
காசிமேடு மீன் சந்தைANI
1 min read

ஒவ்வொரு வருடமும் கடைபிடிக்கப்படும் 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் இன்று (ஏப்.15) முதல் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது.

கோடைக் காலமான ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்கள் வங்கக் கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கம் நடைபெறும். இந்த மாதங்களில் எந்திரப்படகுகள் மூலம் மீன் பிடிக்கும் பட்சத்தில், படகுகளின் வலைகளில் மீன் குஞ்சுகள் சிக்கி அவை எளிதில் அழிந்துவிடும் வாய்ப்பு உள்ளது. இதனால் நாளடைவில் கடலில் மீன்வளம் குறையும் நிலை உருவாகிவிடும்.

இதைக் கருத்தில்கொண்டு தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதியில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட சில நாட்களுக்கு எந்திரப் படகுகள் மூலம் மீன்பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்படும். இந்நிலையில், நடப்பாண்டிற்கான மீன்பிடித் தடைக்காலம் இன்று (ஏப்.15) நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது.

இதனால் நள்ளிரவு தொடங்கி, எந்திரப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்லவில்லை. வழக்கமாக நிறுத்திவைக்கப்படும் இடங்களில் தங்கள் படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். அதேநேரம் மோட்டார் பொருத்தப்பட்ட செயற்கை இழைப் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளில் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவதில்லை.

இன்று நடைமுறைக்கு வந்துள்ள மீன்பிடித் தடைக்காலம் அடுத்த 61 நாட்களுக்கு, அதாவது ஜூன் 14 வரை அமலில் இருக்கும். மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளதால், மீன்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் அடுத்த 2 மாத காலத்திற்கு மீன்களின் விலை கணிசமாக உயரும்.

logo
Kizhakku News
kizhakkunews.in