தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்

"பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?"
தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்
ANI

கச்சத்தீவு விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ள நிலையில், தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

கச்சத்தீவு இலங்கைக்கு விட்டுக்கொடுக்கப்பட்ட விவகாரம் நேற்று முதல் பேசுபொருளாகியுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆர்டிஐ மூலம் கச்சத்தீவு குறித்து தகவல் கோரியிருந்தார். இதில் இந்திரா காந்தி அரசு கட்சத்தீவை இலங்கைக்கு எப்படி விட்டுக்கொடுத்தது என்பது தெரியவந்தது.

இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் இருநாள்கள் விமர்சனங்களைப் பதிவு செய்திருந்தார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்தார். இந்த விவகாரத்துக்குக் காரணமாக திமுகவும், காங்கிரஸும் தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்ற அணுகுமுறையைக் கடைபிடிப்பதாக அவர் விமர்சித்தார்.

இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை நடத்துவதாக எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலினின் எக்ஸ் தளப் பதிவு:

"பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.

1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?

2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?

3. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?

திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே..."

இந்தப் பதிவுடன் "பதில் சொல்லுங்க மோடி" என்ற ஹேஷ்டேக்கையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in