மக்களவைத் தேர்தல்: தமிழ்நாடு உள்பட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

தமிழ்நாட்டில் 950 பேர் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளார்கள். மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.
மக்களவைத் தேர்தல்: தமிழ்நாடு உள்பட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்
1 min read

தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக, தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

16.86 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள். 102 மக்களவைத் தொகுதிகளில் 1.86 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 68,321 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 950 பேர் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளார்கள். மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள். 3.32 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

தென் சென்னை தொகுதிக்குள்பட்ட திருவான்மியூரில் நடிகர் அஜித் முதல் நபராக வந்து வாக்களித்துச் சென்றார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையத்தில் குடும்பத்தினருடன் சென்று வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் காலை 7 மணிக்கு சிவகங்கையில் தனது வாக்கைச் செலுத்தினார்.

புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், புதுவை தலைமைத் தேர்தல் அதிகாரி தனது வாக்கைச் செலுத்தியுள்ளார்.

மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

விளவங்கோடு:

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவும் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in