
உதகையில் உள்ள கர்நாடக அரசுக்குச் சொந்தமான தோட்டக்கலை பூங்காவில் முதல்முறையாக குளிர்கால மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தமிழக அரசுக்குச் சொந்தமான தாவரவியல் பூங்காவில் ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படும். அதேநேரம், உதகை ஏரிக்கு அருகே ஃபர்ன்ஹில் பகுதியில் கர்நாடக அரசுக்குச் சொந்தமான தோட்டக்கலை பூங்கா அமைந்துள்ளது.
இந்த தோட்டக்கலை பூங்காவில் நடப்பாண்டின் குளிர் காலத்தில் முதல்முறையாக மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 38 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் தோட்டக்கலைத் தோட்டம், ரோஜா தோட்டம், இத்தாலிய தோட்டம், தொங்கு பாலம், குளம், செயற்கை நீர்வீழ்ச்சி ஆகியவை அமைந்துள்ளன.
இந்நிலையில், இந்தப் பூங்காவில் குளிர்கால மலர் கண்காட்சியை நடத்துவதற்கு ஏதுவாக மேரிகோல்டு, ஆர்கிட், டியூபெரோஸ் போன்ற 200 ரகங்களைச் சேர்ந்த 5 லட்சம் மலர்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
நடப்பு (டிசம்பர்) மாதத்தின் 3-வது வாரத்தில் இந்த குளிர்கால மலர் கண்காட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதன் தொடக்க நிகழ்வில் தமிழக மற்றும் கர்நாடக முதல்வர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பூங்காவைச் சுற்றிப் பார்க்க நபர் ஒன்றுக்கு ரூ. 100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.