விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக ஆலையின் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கந்தசாமி என்பவருக்குச் சொந்தமாக பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் 20-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இதில் நிறைய ஃபேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. மொத்தம் 40-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் இதில் பணிபுரிந்து வருகிறார்கள்.
இன்று காலை மருந்து கலவையைத் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, உராய்வு ஏற்பட்டதன் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது.
வெடிவிபத்தால் 4 மணி நேரத்துக்கு பட்டாசுகள் வெடித்துச் சிதறின. தொழிலாளர்களின் நிலை குறித்து தொடக்கத்தில் கவலை ஏற்பட்டது. தீயை அணைப்பதும் தீயணைப்பு வீரர்களுக்கு மிகச் சவாலாக இருந்தது.
இதன்பிறகு, வடமாநிலத் தொழிலாளர்கள் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை எனத் தகவல் வெளியானது. பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் ஆலையில் இருந்த மொத்த அறைகளும் தரைமட்டமாகியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆலைக்கு 15 கிலோ மீட்டர் சுற்றளவில் இருந்த இடங்களில் பட்டாசு வெடித்ததன் அதிர்வு தென்பட்டிருக்கிறது. இதனால், வீடுகள் சில சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விபத்து தொடர்பாக ஆலையின் மேலாளர் சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலை உரிமையாளர் கந்தசாமி உள்பட மூன்று பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.