
சென்னையை அடுத்த பட்டாபிராமில் நாட்டுவெடிகள் வெடித்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ஆவடி அருகே தண்டுரை என்ற பகுதியில் நாட்டுவெடிகளை விற்பனை செய்து வந்ததாகத் தெரிகிறது. நாட்டு வெடிகளை வாங்க அவ்வப்போது வாடிக்கையாளர்கள் வந்து செல்வது வழக்கமாக இருந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், நாட்டு வெடிகளை வாங்க இருவர் இன்று அங்கு சென்றிருக்கிறார்கள். அப்போது எதிர்பாராத விதமாக நாட்டு வெடிகள் வெடித்து விபத்து நேர்ந்துள்ளது. விற்பனை செய்து வந்த வீடு விபத்தில் இடிந்து விழுந்து நாசமானது. நாட்டு வெடிகளை விற்பனை செய்து வந்த இருவர் மற்றும் வாங்க வந்த இருவர் என மொத்தம் 4 பேர் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்கள் என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
பட்டாபிராமில் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஆய்வு மேற்கொண்டார். விற்பனை செய்த இருவர், வாங்க வந்த இருவர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்ததை அவர் உறுதி செய்தார். மேலும், நாட்டு வெடிகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் மேற்கொண்டு யாரும் உயிரிழந்துள்ளார்களா என்பதைக் கண்டறிய இடிபாடுகள் அகற்றப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் இருவர் யாசின் மற்றும் சுனில் என அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். மற்ற இருவர் யார் மற்றும் வெடி விபத்துக்கான காரணம் என்ன என்பதைக் காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
உயிரிழந்த 4 பேருடைய உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Avadi | Pattabiram | Firecracker Blast | Cracker Blast |