நாமக்கல்லில் காவல் துறையினரிடம் பிடிபட்ட 6 கொள்ளையர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்ற முகமூடி கும்பல், நேற்று காலை கொள்ளையடிக்கப்பட்ட பணத்துடன் நாமக்கல் அருகே பிடிபட்டது. அப்போது காவல்துறை மேற்கொண்ட என்கவுன்டரில் ஒருவர் உயிரிழந்தார், ஒருவர் காயமடைந்தார்.
3 ஏடிஎம்களில் இருந்து சுமார் ரூ. 65 லட்சம் கொள்ளை போனதாகத் தகவல் வெளியானது. கொள்ளையர்கள் அனைவரும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணா கூறுகையில், இந்தக் கொள்ளையர்கள் பெரிய கும்பலாகச் செயல்படுவதாகவும், இந்தக் கும்பலில் சுமார் 70 பேர் வரை இருக்கலாம் என்றும் கூறினார்.
மேலும், இதே கும்பல் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏடிஎம் கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர்களுடைய இருப்பிடம், சொத்துகள், மூளையாகச் செயல்படுபவர் யார் என்பது உள்ளிட்ட தகவல்களையெல்லாம் விசாரித்து வருவதாகவும் கூறினார்.
இந்தக் கொள்ளையர்களில் இருவர் தில்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொள்ளையடிக்க கூகுள் மேப் போன்றவற்றைப் பயன்படுத்துவதாகவும், கொள்ளையடித்து முடிக்க வெறும் 15 நிமிடங்களை மட்டுமே எடுத்துக்கொள்வதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கொள்ளையர்கள் 6 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் தனித்தனியே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மூன்று மாநில காவல் துறையினர் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்கள். இதைத் தொடர்ந்து, குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்கள்.