பாலியல் வன்கொடுமை வழக்கின் எஃப்.ஐ.ஆர். வெளியானது சட்டவிரோதம்: அண்ணாமலை

பாலியல் வன்கொடுமை வழக்கின் எஃப்.ஐ.ஆர். வெளியானது சட்டவிரோதம்: அண்ணாமலை

திமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்க, இத்தனை கீழ்த்தரமான, மனசாட்சியற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது திமுக அரசு.
Published on

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவியின் தகவல்கள் அடங்கிய எஃப்.ஐ.ஆர். வெளியான விவகாரத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், கடந்த 24-ம் தேதி இரவில் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, நடைபாதையில் பிரியாணிக் கடை நடத்தும் ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். ஏற்கனவே முன்பு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள ஞானசேகரன் மீது 13 வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று (டிச.26) காலை அண்ணாமலை பதிவிட்டவை பின்வருமாறு,

`சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தச் சென்ற, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில பாஜக துணைத் தலைவர் கரு. நாகராஜன், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சகோதர சகோதரிகளை, வலுக்கட்டாயமாகக் கைது செய்திருக்கிறது காவல்துறை.

குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) வெளியே கசிய விட்டிருக்கிறார்கள். ஒரு பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கடமையிலிருந்து தவறியிருக்கிறது திமுக அரசு. இது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, சட்டவிரோதச் செயல்பாடும் ஆகும்.

இதற்கு முதல்வர் ஸ்டாலின் முழு பொறுப்பு. திமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்க, இத்தனை கீழ்த்தரமான, மனசாட்சியற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் திமுக அரசையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதல்வர் ஸ்டாலினையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியிருப்பதற்கு வெட்கப்படுங்கள் ஸ்டாலின்’ என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in