சவுக்கு சங்கர் மீது மேலும் 3 மாவட்டங்களில் வழக்குப் பதிவு

சவுக்கு சங்கர் மற்றும் ஃபெலிக்ஸ் ஆகியோர் மீது சென்னையில் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் மீது மேலும் 3 மாவட்டங்களில் வழக்குப் பதிவு

பத்திரிகையாளரும், யூடியூபருமான சவுக்கு சங்கர் மீது சென்னை பெருநகர காவல் துறை மேலும் இரு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் பெண் செய்தி ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கருக்கு எதிராக பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழர் முன்னேற்றப் படை நிறுவனர் மற்றும் தலைவர் வீரலட்சுமி என்பவர் அளித்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மற்றும் ஃபெலிக்ஸ் ஆகியோர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல திருச்சியிலும் பெண் காவலர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இங்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலத்தில் காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் அங்கும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, கோவை மற்றும் தேனியில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் அவர் கைதாகி சிறையில் உள்ளார்.

தேனியில் போதைப் பொருள் வைத்திருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் இன்று மதுரையிலுள்ள போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுகிறார்.

கோவை நீதிமன்றத்தில் பிணை கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்துள்ள மனு 10-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in