அரசுப் பள்ளிகளில் அறிவியலுக்குப் புறம்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு மீது திருவொற்றியூர் காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் பரம்பொருள் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு. இரு பள்ளிகளிலும் இவர் அறிவியலுக்குப் புறம்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.
சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் இதைத் தட்டிக்கேட்ட ஆசிரியர் சங்கர் என்பவரை மரியாதை குறைவாக நடத்தியிருக்கிறார். இந்த விவகாரம் பூதாகரமானது. மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்தார்.
அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்கள். சைதாப்பேட்டை மற்றும் திருவொற்றியூர் காவல் நிலையங்களில் மகாவிஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டது. இவற்றைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று மாலை புகார் அளிக்கப்பட்டது.
இவற்றுக்கு மத்தியில், ஓடி ஒளியக்கூடிய அளவுக்கு தான் எதுவும் பேசவில்லை என்று வெள்ளிக்கிழமை இரவு விளக்கம் கொடுத்த மகாவிஷ்ணு, சனிக்கிழமை பிற்பகல் சென்னை வருவதாகத் தெரிவித்திருந்தார். இதன்படி, நேற்று மதியம் சென்னை வந்த மகாவிஷ்ணுவைக் காவல் துறையினர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தார்கள். எனினும், விமான நிலையத்திலிருந்து இவர் எங்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
இதன்பிறகு தான், சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்கீழ் 92(a) பிரிவிலும், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் 192, 196 (1) a, 352, 353 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் அனிதா ஆனந்த் முன்பு மகாவிஷ்ணு ஆஜர்ப்படுத்தப்பட்டார். இவரை 14 நாள்கள் (செப்டம்பர் 20 வரை) நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, மகாவிஷ்ணு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், திருவொற்றியூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை இழிவாகவும், மனம் புண்படும் வகையில் பேசியதாகவும் மாற்றுத்திறனாளி சமூக நீதி இயக்கத்தின் மாநிலத் தலைவர் சரவணன் என்பவர் இந்தப் புகாரை அளித்திருந்தார்.