பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது பிராங்க் செய்த குற்றத்துக்காக திருப்பதியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் தனது நண்பர்களுடன் கடந்த வாரம் திருப்பதி சென்றிருக்கிறார். சாமி தரிசனத்துக்காக நண்பர்களுடன் இவர் வரிசையில் காத்திருக்கிறார்.
அப்போது தனது நண்பரை திருப்பதி தேவஸ்தானத்தின் ஊழியராக நடிக்கச் சொல்லி டிடிஎஃப் வாசன் பிராங்க் செய்திருக்கிறார். இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் மிகப் பெரிய அளவில் கவனம் பெற்றது. இதைத் தொடர்ந்து, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இதற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
"சில தமிழ் யூடியூபர்கள் எடுத்த பிராங்க் விடியோ செயலுக்கு திருப்பதி தேவஸ்தானம் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறது. சாமி தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களின் உணர்வுகளை இது காயப்படுத்தியுள்ளது. இவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தேவஸ்தானம் அளித்த புகாரின் பேரில் டிடிஎஃப் வாசன் மீது திருப்பதியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, டிடிஎஃப் வாசனுக்கு அழைப்பாணையும் அனுப்பப்பட்டுள்ளது.