2025 பொங்கள் நாளான்று சி.ஏ. என்று அழைக்கப்படும் பட்டய கணக்காளர் தேர்வு நடத்தப்படுவதற்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தெரிவித்துள்ள கண்டனத்திற்கு பதிலளித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
வரும் 2025 ஜனவரியில் நடைபெறவுள்ள சி.ஏ. பவுண்டேஷன் தேர்வுகள் குறித்த அறிவிப்பை இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் வெளியிட்டது. இதன்படி, பொங்கல் (14.01.2024) அன்று Business laws தேர்வும், உழவர் திருநாள் (16.11.2024) அன்று Quantitative Aptitude தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொங்கல் திருவிழா தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைவர் சி.ஏ. ரஞ்சித் குமார் அகர்வாலுக்கும் கடிதம் எழுதியுள்ளார் எம்.பி. சு. வெங்கடேசன்.
மேலும், மேற்கூறிய கடிதத்தைப் பகிர்ந்து தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் சு. வெங்கடேசன் பதிவிட்டவை பின்வருமாறு, `பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள். எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. மத்திய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு’ என்றார்.
இந்த குற்றச்சாட்டிற்கு தன் எக்ஸ் கணக்கில் பதிலளித்துள்ள பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா, `மகர சங்கராந்தி, லோஹ்ரி, உத்தராயணி, பிஹு என பொங்கல் பண்டிகை பல்வேறு பெயர்களில் வெவ்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருவிழாவை தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவே கொண்டாடுகிறது. சி.ஏ. தேர்வுகளுக்கான தேதிகளை தன்னாட்சி அமைப்பான இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் முடிவுசெய்கிறது. நிதி அமைச்சகத்திற்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை’ என்றார்.
எஸ்.ஜி. சூர்யாயின் பதிவை தன் எக்ஸ் கணக்கில் பகிர்ந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், `சரியாகவும், விளக்கமாகவும் பதில் சொல்லியிருக்கிறீர்கள் சூர்யா. எதில் பார்த்தாலும், எப்போது பார்த்தாலும் “தமிழ் விரோதி” பிரச்சாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது’ என்றார்.