தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள்: வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | Final Voters List | ECI | SIR |

2,77,38,925 ஆண்கள், 2,89,60,838 பெண்கள் மற்றும் திருநர் சமூகத்தைச் சேர்ந்த 7,617 வாக்காளர்கள்....
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம்: இந்திய தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள்: அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு@ECISVEEP
2 min read

தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

பிஹார் மாநிலத்தைத் தொடர்ந்து நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 9 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்றன. இது தொடர்பான அறிவிப்பை அக்டோபர் 27 அன்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் அறிவித்தார். அன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.

தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர திருத்தம்

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்றன. கடந்த ஆண்டு நவம்பர் 4 அன்று பணிகள் தொடங்கின. தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மற்றும் முகவர்கள் வீடு வீடாகச் சென்று சிறப்புத் தீவிரத் திருத்தப் படிவங்களை வழங்கி, உரிய தகவல்களைச் சரிபார்த்து உறுதி செய்தனர். டிசம்பர் 14 அன்று பணிகள் முடிந்ததை அடுத்து டிசம்பர் 19 அன்று வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

வரைவு வாக்காளர் பட்டியல்

வரைவு வாக்காளர் பட்டியலில், இறந்தவர்கள் 26.95 லட்சம், இரட்டைப் பதிவு வாக்காளர்கள் 3.98 லட்சம், குறிப்பிட்ட முகவரியில் வசிக்காத வாக்காளர்கள் 66.44 லட்சம் என மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்மூலம் தமிழ்நாட்டின் வாக்காளர்கள் எண்ணிக்கை 5.43 கோடியாகக் குறைந்தது. இதைத் தொடர்ந்து இணையதளம், சிறப்பு முகாம்கள் மூலம் விடுபட்ட பெயர்களைச் சேர்த்தல் உள்ளிட்ட பணிகள், டிசம்பர் 19 முதல் பிப்ரவரி 10 வரை நடைபெற்றன.

இறுதி வாக்காளர் பட்டியல்

இதையடுத்து, தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது. முன்னதாக இன்று காலை மாவட்டம்தோறும் தேர்தல் அதிகாரிகள் இறுதி வாக்காளர் பட்டியல்களை வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து சென்னையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இறுதி வாக்காளர் பட்டியலின் தகவல்களை வெளியிட்டார். அதன்படி, அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 5,67,07,380 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,77,38,925 ஆண் வாக்காளர்கள், 2,89,60,838 பெண் வாக்காளர்கள் மற்றும் திருநர் சமூகத்தைச் சேர்ந்த 7,617 வாக்காளர்கள் உள்ளனர்.

புதிய சேர்க்கை எவ்வளவு?

சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு முன் தமிழ்நாட்டில் 6,41,14,587 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 5,67,07,380 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் படிவம் 6 மூலம் புதிய வாக்காளர்களாக 27,53,796 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 74,07,207 பேர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா என்பதை https://electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Summary

Tamil Nadu Chief Electoral Officer Archana Patnaik has said that there are a total of 5.67 crore voters in Tamil Nadu.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in