கடந்த மாதம் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அவமதிக்கப்பட்ட விவகாரத்தை அடுத்து இன்று (செப்.01) தமிழக மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் மீனாட்சியம்மன் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த ஆகஸ்ட் 6-ல் தருமபுரியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் தமிழ்ச்செல்வி என்பவர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.
அப்போது அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் தமிழ்ச்செல்வியின் செயற்கைக் காலை ஆகற்றினால் மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும் எனத் தெரிவித்ததாகவும், இருசக்கர நாற்காலியில் கோவிலுக்குள் செல்ல கோவில் ஊழியர்கள் ரூ. 500 லஞ்சம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து காணொளியை வெளியிட்டார் தமிழ்ச்செல்வி.
இந்தக் குற்றச்சாட்டை அடுத்து தமிழக மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் புஷ்பராஜ், சில முக்கியமான மாற்றுத்திறனாளிகள் நல அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இன்று மீனாட்சியம்மன் கோவிலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கோவிலுக்குள் மாற்றத்திறனாளிகள் செல்வதற்கு ஏதுவாக சக்கர நாற்காலிகள், சாய்வு தளங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருக்கிறதா என்று ஆய்வு மேற்கொண்டுவிட்டு அவர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்தனர்.