
ஃபெஞ்சல் புயல் நேற்று (நவ.30) இரவு கரையைக் கடந்துவிட்டது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், புயல் இன்னும் கரையைக் கடக்கவில்லை, அது கடலில் நிலை கொண்டுள்ளது என பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.
தன் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் இன்று (டிச.1) காலை 8.30 மணி அளவில் பிரதீப் ஜான் பதிவிட்டவை பின்வருமாறு,
`ஃபெஞ்சல் புயல் கடலில் நிலைகொண்டுள்ளது. அது இன்னும் கரையைக் கடக்கவில்லை (கீழே கொடுக்கப்பட்டுள்ள செயற்கைக்கோள் படங்களை கவனிக்கவும்). இன்று (டிச.1) மதியம் அல்லது மாலை அளவில் ஃபெஞ்சல் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலை கொண்டிருக்கும் புயலால், இன்றும் கடலூர், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும். இன்று மாலை வரை புயல் அங்கே நிலைகொள்ளும்.
சென்னையில் இன்று மழை விட்டுவிட்டுப் பெய்யும், சில நேரங்களில் கனமழை பொழிவு இருக்கும்.
வரலாறு காணாத மழை:
காலை 7.15 மணி வரை விழுப்புரத்தில் 504 மி.மீ (மயிலம் தானியங்கி வானிலை நிலையம்) மழையும், புதுச்சேரியில் 490 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. வரலாறு காணாத அளவுக்கு புதுச்சேரியில் 500 மி.மீ மழை பொழிவுக்கு வாய்ப்புள்ளது.
பின்குறிப்பு: புயல் கரையைக் கடக்கும் கணிப்பு, அதிகாரபூர்வ வானிலை மையத்தின் கணிப்பில் இருந்து வேறுபடலாம். எனவே அனைத்துவித தகவல்களுக்கும் அதிகாரபூர்வ வானிலை மையத்தின் வழிகாட்டுதலை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ரேடார், செயற்கைக்கோள் படங்களை இணைத்துள்ளேன். புயல் கரையைக் கடக்காததால், இந்த இடங்களில் கனமழையும், பலத்த காற்றும் இருக்கும். இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது’ என்றார்.