
ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் சென்னை டி.பி. சத்திரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெக தலைவர் விஜய் நிவாரண உதவிகளை வழங்கினார்.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் தமிழ்நாட்டில் முதலில் சென்னையில் கனமழை பெய்தது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகமாக இருந்தது.
வரலாறு காணாத மழை பெய்ததால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரியில் இரு வட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் 7 பேர் சிக்கிய நிலையில், 6 பேருடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ. 2,000 வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சென்னை டி.பி. சத்திரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பனையூருக்கு வரவழைத்து அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதுதொடர்புடைய புகைப்படங்கள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. சுமார் 300 குடும்பங்களுக்கு விஜய் நிவாரண உதவிகளை வழங்கினார்.
முன்னதாக, திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்திருந்தார். மேலும், "புயல், மழை, வெள்ளப் பெருக்கு ஆகிய காலங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும்" என்றும் தனது அறிக்கையில் விஜய் குறிப்பிட்டிருந்தார்.