ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 498.8 கோடி நிவாரணம் ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்தாண்டு நவம்பர் 30-ல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு வடமாவட்டங்களில் கனமழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகளும், பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களும் சேதமடைந்தன.
2,416 குடிசைகள், 721 வீடுகள், 963 கால்நடைகள் இழப்புகளுடன், 2.11 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான விவசாய-தோட்டக்கலை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்தது.
இந்தப் புயலைக் கடுமையான இயற்கை பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்தது. மத்திய அரசும் இதைக் கடுமையான இயற்கை பேரிடராக அறிவித்தது. ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கடலூர், விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 18 மாவட்டங்களிலுள்ள விவசாயிகளுக்கு ரூ. 498.8 கோடியை ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையானது அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்மூலம், 5,18,783 விவசாயிகள் பயனடையவுள்ளார்கள்.
மானாவாரி பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 8,500 நிவாரணம்.
நெற்பயிர் மற்றும் பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 17,500 நிவாரணம்.
நீண்டகாலப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 22,500 நிவாரணம்.