

சவுக்கு சங்கரை நேர்காணல் செய்த வழக்கில் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்குப் பிணை வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், அவரது யூடியூப் சேனலை மூட உத்தரவிட்டுள்ளது.
பெண் காவல் அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் பல்வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரைக் கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே 12-ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் சவுக்கு சங்கரை நேர்காணல் செய்த ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் பிணை கோரி ஃபெலிக்ஸ் ஜெரால்டு சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சர்ச்சைக்குரிய வகையில் பேசமாட்டேன் என ஏற்கெனவே ஒருமுறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துவிட்டு மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு, தான் பேசியதன் விளைவைத் தற்போது உணர்ந்துவிட்டதாகவும், மீண்டும் இவ்வாறு பேச மாட்டேன் என்றும் ஃபெலிக்ஸ் ஜெரால்டு உறுதியளித்தார். இதன் அடிப்படையில், ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்குப் பிணை வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, தனது யூடியூப் சேனலை ஃபெலிக்ஸ் ஜெரால்டு மூட வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய வகையில் இனி நேர்காணல் செய்ய மாட்டேன் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.