
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-வது ஆண்டு விழா மற்றும் சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தின் 160-வது ஆண்டு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
முதலில் ஒரு விளக்கத்தை நான் சொல்ல விரும்புகிறேன். மாண்புமிகு நீதியரசர் திரு.சுந்தரேஷ் அவர்கள் இங்கு உரையாற்றிய போது ஒரு இக்கட்டான நிலையில் நின்று கொண்டிருக்கிறேன் என்று சொன்னார். ஒரு நீதியரசர் தமிழில் பேசுவார் என்று நினைத்தோம்; ஆங்கிலத்தில் பேசினார். ஒரு நீதியரசர் ஆங்கிலத்தில் பேசுவார் என்று நினைத்தோம்; ஆனால், தமிழில் பேசினார். இதுதான் இரு மொழிக் கொள்கை. இது தமிழ்நாடு. இக்கட்டான நிலை எல்லாம் கிடையாது. நல்ல நிலைதான் இது.
நேற்று நிதிநிலை அறிக்கையை நாங்கள் தாக்கல் செய்தோம். நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துவிட்டு, இன்றைக்கு நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறோம்.
உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் திரு.ஸ்ரீராம் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு, அவருடன் நான் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி. அதனால், நான் பெருமைப்படுகிறேன்.
மெட்ராஸ் பார் அசோசியேஷனின் போற்றத்தக்க 160-ஆம் ஆண்டு பயணத்தைக் குறிக்கும் கொண்டாட்டத்தில் உங்களுடன் நானும் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்; பெருமைப்படுகிறேன்.
அண்மைக் காலங்களில், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளில் ஒன்றான கூட்டாட்சித் தத்துவம் பாதிக்கப்படுகின்ற நிலை காணப்படுகிறது.
நிதி, கல்வி போன்ற பல விஷயங்களில், மாநில அரசுகளின் சுயசார்புத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்று கருதுகிறேன்.
அரசமைப்புச் சட்டத்தின் ஆளுமையை உறுதி செய்வதில், மாநிலங்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதில் நீதித்துறை தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது.
நீதித் துறை உட்கட்டமைப்புக்குத் தேவையான அனைத்து வசதிகளை மேம்படுத்தித் தர தமிழ்நாடு அரசு என்றைக்கும் துணை நிற்கும்.
உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர்கள் வருகை புரிந்துள்ள இந்த நேரத்தில், சென்றமுறை இதே இடத்தில் நான் வைத்த ஒரு முக்கியமான கோரிக்கையை மீண்டும் ஒருமுறை இங்கே நினைவுபடுத்த நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைத்தால், தென்மாநில மக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் மிகுந்த பயனுடையதாக இருக்கும் என்பதை மீண்டும் இந்த நேரத்தில் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன் என்றார்.