
மதுரையில் அமையவுள்ள டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக, தலைமை தபால் நிலையத்தை நோக்கித் தடையை மீறிப் பேரணி நடத்தினார்கள் விவசாயிகள்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ. வல்லாளப்பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5,000 ஏக்கர் நிலத்தை, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் வகையில், வேதாந்தை குழுமத்தைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது.
தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமான அரிட்டாபட்டியை உள்ளடக்கிய பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. மத்திய அரசு வழங்கிய ஏல உரிமையை ரத்து செய்ய வேண்டும் என அப்பகுதியில் உள்ள 52 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தத் தொடங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து, ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யும் வகையில் மத்திய சுரங்க அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறும், மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என சுரங்க அமைச்சகத்துக்கு அறிவுறுத்துமாறும், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதினார்.
அதன்பிறகு, டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக் கூடாது எனவும் மத்திய அரசை வலியுறுத்திக் கடந்த டிச.9-ல் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக இன்று (ஜன.7) பேரணி நடத்த முல்லைப்பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் பேரணி நடத்தக் காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து காவல்துறை தடையையும் மீறி ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கான விவசாயிகள் மதுரை தலைமை தபால் நிலையத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். டங்ஸ்டன் சுரங்கம் அமையவுள்ள பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.