
முதல்வர் மு.க. ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் உள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் (தூர்தர்ஷன் தமிழ்) பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து ஹிந்தி மாதம் நிறைவு விழா கொண்டாட்டங்களும் நடைபெற்றன. ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக இதில் கலந்துகொண்டார். நிகழ்ச்சி தொடக்கத்தின்போது தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்கள் பாடப்பட்டன. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின்போது, 'தெக்கணும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடு' என்ற வரிகள் தவிர்க்கப்பட்டன.
ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் திராவிடம் என்ற சொல் இடம்பெற்றுள்ள வரிகள் தவிர்க்கப்பட்டது அரசியல் களத்தில் சர்ச்சையை உண்டாக்கியது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இதற்குக் கண்டனம் தெரிவித்து ஆளுநர் ஆர்.என். ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
"ஆளுநருக்கு, நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தவிர வேறு எந்தத் தொடர்பும் கிடையாது. தமிழ் மற்றும் தமிழ்நாட்டின் உணர்வுகள் மீது ஆளுநர் மிகுந்த மரியாதையைக் கொண்டிருக்கிறார்" என ஆளுநரின் ஊடக ஆலோசகர் திருஞான சம்பந்தம் விளக்கமளித்தார். இதைத் தொடர்ந்து, டிடி தமிழ் சார்பிலும் தன் தரப்பு விளக்கம் அளிக்கப்பட்டு மன்னிப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பொதுவெளியில் அவசரகதியில் இனவாத கருத்துகள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை முதல்வர் முன்வைத்ததால், அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் தான் இருப்பதாகக் கூறி ஆளுநர் ஆர்.என். ரவி விளக்கம் அளித்துள்ளார்.
எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாகப் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாகப் பாடுவேன் என்பதையும் அதைப் பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் மத்திய அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவி தமிழ் மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தைத் தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது என்பதையும் முதல்வர் நன்றாக அறிவார். பிரதமர் மோடி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழைக் கொண்டு சென்றார்.
ஒரு பெருமைமிகு இந்தியன் என்ற முறையில், நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளைச் செய்துள்ளேன். அதில், சமீபத்திய நடவடிக்கையாக வட கிழக்கு மாநிலத்தில் தமிழைப் பரப்ப அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுஹாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
ஓர் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தைத் தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது.
தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதலமைச்சர் அவர்கள் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்" என்று ஆளுநர் ஆர்.என். ரவி குறிப்பிட்டுள்ளார்.