
கடந்த 10 ஆண்டு காலமாக சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்பட்ட தொகை முன்வைத்து மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
2014-15 மற்றும் 2024-25-க்கு இடைப்பட்ட காலத்தில் சமஸ்கிருத மொழியை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ. 2532.59 கோடியை செலவிட்டுள்ளது, இதை ஒப்பிடும்போது, பிற ஐந்து இந்திய செம்மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகியவற்றுக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 147.56 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், பிற மொழிகளைவிட சமஸ்கிருத மொழிக்கு செலவிடப்பட்ட தொகை 17 மடங்கு அதிகம் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெறப்பட்ட தரவுகளை ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
இந்திய மொழிகளை மேம்படுத்துவதற்கான மானியங்கள் (GPIL) திட்டத்தின் கீழ், 2004-ல் `செம்மொழி’ அந்தஸ்து வழங்கப்பட்ட முதல் இந்திய மொழியான தமிழுக்கு ரூ. 113.48 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2005-ல் செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்ட சமஸ்கிருத மொழியை மேம்படுத்துவதற்காக செலவிடப்பட்ட தொகையை விட இது 22 மடங்கு குறைவாகும்.
2008 மற்றும் 2014-க்கு இடைப்பட்ட காலத்தில் செம்மொழி அந்தஸ்தைப் பெற்ற கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஒடியா மொழிகளுக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 34.08 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. அதேநேரம், உருது மொழிக்கு ரூ. 837.94 கோடியும், ஹிந்தி மொழிக்கு ரூ. 426.99 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 120 கோடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒடியா மற்றும் கன்னடம் பேசுபவர்கள் 21.99% ஆக இருந்தனர். சமஸ்கிருதம் பேசுபவர்களின் விகிதம் மிகவும் குறைவு.
ஹிந்தி பேசுபவர்கள் (அந்த மொழியைத் தங்கள் தாய்மொழியாகப் பட்டியலிட்டவர்கள்) 43.63% ஆகவும், உருது பேசுபவர்கள் 4.19% ஆகவும் இருந்தனர்.
நிதி ஒதுக்கீடு தொடர்பான மேற்கூறிய தரவுகளை குறிப்பிட்டு தன் எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது,
`போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்திற்கு. சமஸ்கிருத மொழிக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு; தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழிகளுக்கு முதலைக் கண்ணீர் மட்டுமே கிடைக்கிறது’ என்றார்.