கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வசித்தவர்களின் முகம் அறிவியல் வழியில் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தால் மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கீழடி. இங்கு தொல்லியல் துறையால் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரிமப் பகுப்பாய்வு காலக்கணக்கீடு மூலம் கீழடி நாகரிகத்தின் காலகட்டம் பொதுயுகத்துக்கு முன் 6-ம் நூற்றாண்டைக் குறிப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
கீழடிக்கு அருகே கொந்தகையிலிருந்து இரு மண்டை ஓடுகள் கிடைத்தன. இந்த மண்டை ஓடுகளை மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் படம்பிடித்து ஸ்கேன் செய்து மண்டை ஓடுகளின் படங்களை பிரிட்டனிலுள்ள லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த மண்டை ஓடுகளைக் கொண்டு 80% அறிவியல்பூர்வமாகவும் 20% கலைபூர்வமாகவும் மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ளது ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம்.
கணினி உதவியுடன் முப்பரிமாணத்தில் முகங்கள் மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. கொந்தகையிலிருந்து எடுத்து அனுப்பி வைக்கப்பட்ட மண்டை ஓடுகளின் மேல் பகுதி சரியாக இருந்ததால், மிகத் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஃபேஸ் லேப் இயக்குநர் பேராசிரியர் கரோலின் வில்கின்சன் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. ஃபேஸ் லேப் இந்த ஆய்வுகளை மேற்கொள்கிறது. மண்டை ஓடுகளின் கீழ் பகுதிகளில் சில இல்லாததால், ஆர்தோடான்டிக் தரத்தில் கீழ் பகுதியின் வடிவம் கணித்து மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மண்டை ஓடுகளின் முகங்கள் இப்படிதான் இருந்திருக்க வேண்டும் என முகங்கள் மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. அதாவது கீழடியில் வாழ்ந்த இரு மனிதர்கள் இப்படியாக இருந்திருக்க வேண்டும் என்பதற்கு சான்றாக இந்த முகங்கள் வடிவமைப்பு அமைந்துள்ளன.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இதைக் கண்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"சங்க இலக்கியம் சொற்களால் வடித்த வாழ்வியல் எல்லாம் அறிவியல்வழி நிறுவப்பட்ட சான்றாகக் கீழடியில்!"
அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை ஆய்வு செய்து அறிவியல் வழியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை வடிவமைத்துள்ளது இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம்.
கீழடியில் தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான அறிவியல் சான்றுகள் ஒன்றின் பின் ஒன்றாக உலக அரங்கில் நிரூபிக்கப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.
இதற்கு பின்பாவது ஒன்றிய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா என்பதே 8 கோடி தமிழர்களின் மனங்களில் எழும் ஒரே கேள்வி!"