அழுத்தங்களை எதிர்கொள்ள தெய்வீகம்தான் வலிமையைக் கொடுக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பணிச்சுமை அழுத்தத்தால் புனேவில் இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி நிர்மலா சீதாராமன் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
அன்னா செபாஸ்டியன் என்ற 26 வயதுடைய இளம் பெண் மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் எர்னஸ்ட் அண்ட் யங் எனும் பன்னாட்டு நிதி ஆலோசனை நிறுவனத்தில் கடந்த மார்ச் மாதம் பட்டயக் கணக்காளராக பணிக்குச் சேர்ந்தார்.
கடந்த ஜூலை 20 அன்று பணி முடிந்து வீடு திரும்பிய அன்னா செபாஸ்டியன் மயங்கி விழுந்து உயிரிழந்தார். கடுமையான பணிச்சுமையே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
மகள் மறைவு குறித்து எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனத்துக்கு அன்னா செபாஸ்டியனின் தாயார் வெளிப்படையாக ஒரு கடிதம் எழுதியிருந்தார். இது சமூக ஊடகங்களில் வைரலானது. இதற்கு நிறுவனத்தின் இந்தியத் தலைவர் ராஜீவ் மேமானி பதிலளித்திருந்தார்.
இதனிடையே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் தனியார் மருத்துவக் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசும்போது நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டாமல் பணிச்சுமை அழுத்தம் குறித்து பேசினார்.
"இரு நாள்களாக செய்தித் தாளில் வரும் ஒரு விஷயம் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். நம் பிள்ளைகள் கல்வி கற்க கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் செல்கிறார்கள். நல்ல விதமாகப் படித்து வெளியே வருகிறார்கள்.
ஒரு நிறுவனத்தின் பெயரை எடுக்காமல் நான் கூறுகிறேன். சிஏ படிப்பை நன்கு படித்து அந்த நிறுவனத்துக்குப் பணிபுரியச் சென்ற ஒரு பெண், அந்த வேலையின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் இரு நாள்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார்.
இதில் நான் கவனித்தது, கல்வி நிறுவனங்கள் நல்ல படிப்பைக் கற்றுக்கொடுத்து, படிக்கும்போதே வேலையை வாங்கிக் கொடுத்தாலும், கல்வியுடன் குடும்பத்திலிருந்து கற்கக்கூடிய சில விஷயங்களைக் கல்வி நிறுவனங்களும் புகட்ட வேண்டும்.
எவ்வளவு படித்து என்ன ஆனாலும் மனதில் அந்த அழுத்தத்தை எடுத்துக்கொள்வதற்கான உள்சக்தி உன்னிடத்தில் இருக்க வேண்டும், உள்சக்தி உன்னிடம் வர வேண்டும் என்றால், தெய்வீகம் மூலமாகத்தான் அது வரும் என்பதைக் குடும்பங்கள் சொல்ல வேண்டும். இறைவனை நம்பு, இறைவனின் கிருபை நமக்கு இருக்க வேண்டும். இறைவனை நாடு. அந்த நல்வழக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதன்மூலம்தான் ஆத்ம சக்தி வளரும்.
ஆத்ம சக்தி வளரவளர தான், அழுத்தங்களைத் தாங்கக்கூடிய பலம், உள்சக்தி வளரும்" என்றார் நிர்மலா சீதாராமன்.
இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் (அமைப்பு) கே. சி. வேணுகோபால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"ஆளும் கட்சியும் நிதியமைச்சரும் அதானி மற்றும் அம்பானி போன்ற பெரு நிறுவனங்களின் வலியை மட்டும்தான் பார்ப்பார்கள். கடுமையாக உழைக்கக் கூடிய இளம் தலைமுறையினரின் வலியைப் பார்க்க மாட்டார்கள். வேலைவாய்ப்புகள் இல்லாத இந்த காலகட்டத்தில் வேலை கிடைத்தாலும், பேராசைமிக்க அமைப்பு முறையால் அன்னா போன்ற புதியவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது" என்று கே.சி. வேணுகோபால் குறிப்பிட்டுள்ளார்.