நம்மை வேண்டாம் என்று சொல்லும் நாட்டுக்குள் கைக்கட்டி நின்று வேலை பார்க்க வேண்டாம் என அண்ணாமலை பேசியுள்ளார்.
சென்னை ஐஐடியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அண்ணாமலை ஆகஸ்ட் 2 அன்று கலந்துகொண்டு உரையாற்றினார். சிறந்த மற்றும் ஆரோக்கியமான இந்தியாவுக்காக இயற்கை வேளாண்மை, பண்ணை இயந்திரமாக்கல் மற்றும் வேளாண் தொழில்நுட்பத்திலுள்ள வாய்ப்புகளைக் கண்டறிய இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசியதாக அண்ணாமலை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் வேண்டாம் என்று சொல்லும் நாட்டுக்குள் அகதிகளாக வேலை பார்க்க வேண்டாம் என்று இளைஞர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.
"அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 10 நாள்களுக்கு முன்பு செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பேசினார். சீனாவில் எந்தப் பொருளையும் தயாரிக்க வேண்டாம். இந்தியாவிலிருந்து வரும் யாரையும் வேலைக்கு எடுக்க வேண்டாம். அமெரிக்காவில் முதலீடு செய்ய வேண்டும். இதைச் செய்தால் மட்டுமே உங்களுடைய தேசபக்தியுடையவர்களாகப் பார்ப்பேன் என்கிறார் டிரம்ப்.
பெரிய அமெரிக்க நிறுவனங்களில் H-1B விசாக்களில் ஏற்கெனவே 72% பேர் நாம் தான். டிரம்ப் தற்போது வேண்டாம் என்கிறார். வேண்டாம் என்று சொல்லும் ஒரு நாட்டுக்குள் அகதிகளாகக் கைக்கட்டி நின்று கூனிக்குறுகி வேலை பார்க்க வேண்டாம். அந்த நாட்டை நம் நாட்டை நோக்கி வருவதற்கான முயற்சிகளை எடுப்போம்" என்று அண்ணாமலை பேசினார்.
Annamalai | Tamil Nadu BJP | IIT Madras | IIT Chennai