
மறைந்த முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவரது மனைவி பொற்கொடி புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.
கடந்தாண்டு ஜூலை 5 அன்று, சென்னை பெரம்பூரில் வைத்து அன்றைய பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
ஜூலை 7 அன்று, ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த பெரம்பூர் பந்தர் கார்டன் பள்ளிக்கு வந்து அக்கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து, தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியும் நியமிக்கப்பட்டனர்.
அதன்பிறகு, பொற்கொடியின் கட்சிப் பதவி பறிக்கப்படுவதாகவும், கட்சிப் பணிகளில் அவர் ஈடுபடமாட்டார் என்றும், கடந்த ஏப்ரல் 14 அன்று தமிழக பகுஜன் சமாஜின் மத்திய ஒருங்கிணைப்பாளர் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட திருவள்ளூரில் உள்ள பொத்தூரில் இன்று (ஜூலை 5) நடைபெற்றது. இந்த நிகழ்வில், அங்கு புதிதாக அமைக்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கின் முழு உருவ சிலை திறந்துவைக்கப்பட்டது.
இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயின் தாயார் கமலா கவாய் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் வைத்து, `தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக அறிவித்த பொற்கொடி, அக்கட்சியின் கொடியை அறிமுகம் செய்துவைத்தார்.