தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்! | KA Sengottaiyan | TVK Vijay |

கட்சியில் இணைந்த செங்கோட்டையனுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார் விஜய்...
தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்!
தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்! https://x.com/TVKPartyHQ
1 min read

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார்.

அதிமுகவில் இருந்த எம்ஜிஆர் காலத்து மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் முன்னாள் அமைச்சராகவும் இருந்தவர். கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்த அவர் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து விலகியவர்களையும் நீக்கப்பட்டவர்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். அதற்காக அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் கெடு விதித்திருந்தார்.

அதன்பின் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் இணைந்து செங்கோட்டையன் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றார். அது பெரும் சர்ச்சையான நிலையில், செங்கோட்டையனைக் கட்சியை விட்டு நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இந்தச் சூழலில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய செங்கோட்டையன், நேற்று (நவ.27) சென்னை தலைமைச் செயலகம் வந்தார். சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவுவைச் சந்தித்து, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார். அதன்பின்னர் நேற்று மாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்திற்குச் சென்று விஜயைச் சந்தித்தார்.

இந்நிலையில் இன்று தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்துக்கு வந்த செங்கோட்டையன், அங்கு அக்கட்சியின் தலைவர் விஜயை சந்தித்து பேசினார். பின்னர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். செங்கோட்டையனுக்கு கட்சித் துண்டை அணிவித்த விஜய், உறுப்பினர் அடையாள அட்டையையும் வழங்கி அவரைக் கட்சிக்குள் இணைத்துக் கொண்டார். செங்கோட்டையனைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

இதையடுத்து செங்கோட்டையனை கட்சிக்கு வரவேற்று விஜய் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

“20 வயது இளைஞராக இருக்கும்போதே எம்ஜிஆரை நம்பி அவருடைய கட்சியில் சேர்ந்தவர். அந்த சின்ன வயதிலேயே எம்எல்ஏ என்ற ஒரு பெரிய பொறுப்பை ஏற்றவர். அதன்பிறகு அவருடைய அந்த பயணத்தில், அந்த இயக்கத்தின் இருபெரும் தலைவர்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கைக்கு உரியவராக அரசியல் களத்தில் இருந்தவர். இப்படி 50 ஆண்டுகளாக ஒரே இயக்கத்தில் இருந்தவர் செங்ககோட்டையன். அவருடைய அரசியல் அனுபவமும், களப்பணியும் நமது தமிழக வெற்றிக் கழகத்திற்குப் பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இன்று செங்கோட்டையனையும் அவருடன் இணைந்து பணியாற்ற நம்முடன் கை கோக்கும் அனைவரையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன். நல்லது நடக்கும், நல்லது நடக்கும், நல்லது மட்டுமே நடக்கும். வெற்றி நிச்சயம்” என்று பேசியுள்ளார்.

Summary

Former Minister K.A. Sengottaiyan joined Tamilaga Vettri Kazhagam with his supporters. Vijay welcomed him with releasing video in social media.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in