துரோகத்திற்கு நோபல் பரிசு எடப்பாடி பழனிசாமிக்குத்தான் தர வேண்டும்: கே.ஏ. செங்கோட்டையன் | KA Sengottaiyan |

கட்சி ஒன்றிணைய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்...
கே.ஏ. செங்கோட்டையன் (கோப்புப்படம்)
கே.ஏ. செங்கோட்டையன் (கோப்புப்படம்)
2 min read

துரோகத்திற்கான நோபல் பரிசைத் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் தர வேண்டும். விதிப்படி இல்லாமல் சர்வாதிகாரப் போக்கில் தன்னைக் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் மூத்த தலைவரான கே.ஏ. செங்கோட்டையன், 1977-ல் அதிமுக போட்டியிட்ட முதல் சட்டமன்ற தேர்தலிலேயே சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். அதன்பின் கட்சியின் பல முக்கிய பொறுப்புகளில் இருந்த செங்கோட்டையன், அதிமுக ஆட்சியில் 4 முறை அமைச்சராக இருந்தவர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பங்களால் அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், கடந்த செப்டம்பர் 5 அன்று அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை எல்லாம் ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கிடையில் கடந்த அக்டோபர் 30 அன்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து வந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்குச் செங்கோட்டையன் மரியாதை செலுத்தியிருந்தார். இது தமிழ்நாட்டு அரசியலில் முக்கியத்துவம் பெற்ற நிலையில் அவர் நேற்று (அக்.31) கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் இதுகுறித்து விளக்கமளிப்பதாகக் கூறிய செங்கோடையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“அதிமுகவின் 1972-ல் எம்ஜிஆர் பயணத்தில் உறுப்பினராக மட்டுமன்றி செயலாளராகவும் இருந்து பணியாற்றியவன். 1975-ல் கோவையில் நடந்த பொதுக்குழுவை வெற்றிகரமாக நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. இமயமே தலையில் விழுந்தாலும் சறுக்காமல் வழுக்காமல் தொண்டாற்றுபவர் செங்கோட்டையன் என்று ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டேன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக உடைந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இருமுறை எனக்கு வாய்ப்பு கிடைத்தபோதும் நான் விட்டுக்கொடுத்தேன். அப்படிப்பட்ட நிலையில் இன்று அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதற்குப் பின் 2019, 2021 மற்றும் மாநகரம், பேரூராட்சி, நகராட்சி, 2024 ஆகிய தேர்தலில் அவர் எடுத்த முடிவுகளால் பல்வேறு சோதனைகள் ஏற்பட்டு அதிமுக தோல்வியைக் கண்டது.

எம்ஜிஆரின் வாழ்க்கையில் அவர் தோல்வியையே பார்த்ததில்லை. ஜெயலலிதா ஒருமுறை தோற்றால் மறுமுறை வெற்றி என்ற சாதனையைச் செய்தவர். அப்படிப்பட்ட அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, தேர்தல் களத்தில் அதிமுக வெற்றி பெற்றதே கிடையாது. அதனால்தான் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் நாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து, அதிமுகவுக்கு வெளியில் இருப்பவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கருத்தை எடப்பாடி பழனிசாமியிடம் நாங்கள் 6 பேர் சேர்ந்து சென்று வலியுறுத்தினோம். இதுகுறித்த செய்திகள் வெளியாகின. ஆனால், அப்படி யாரும் என்னைப் பார்க்கவில்லை. அனைத்தும் பச்சைப் பொய் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதிமுக தொண்டர்களின் எண்ணத்தைத் தான் நாங்கள் வெளிப்படுத்தினோம். எல்லாரும் ஒன்றிணைந்தால் வெற்றி பெறலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள். அது மட்டுமல்ல சோர்வாக இருக்கும் அதிமுக தொண்டர்களை ஒன்றிணைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் அவரிடம் இதனை வலியுறுத்தினோம்.

கடந்த செப்டம்பர் 5 அன்று மனம் திறந்து பேசியபோது 10 நாள்களில் இதற்கான பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்று சொன்னேன். அது கெடு அல்ல என்பதை அன்றே சொன்னேன். ஆனால் செய்திகளில் செங்கோட்டையன் கெடு விதித்தார் என்றுதான் வெளியானது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது. மீண்டும் அதிமுக புத்துயிர் பெற்று தமிழ்நாட்டில் நல்லாட்சியைத் தர வேண்டும் என்ற கருத்துக்கு ஏற்ப கட்சி ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

அதிமுகவுக்காக 53 ஆண்டுகள் என்னை அர்ப்பணித்த என்னைக் கட்சியில் இருந்து நீக்கியிருப்பது மன வேதனையை அளிக்கிறது. நான் கண்ணீர் சிந்த வேண்டிய சூழலில் மனம் இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எடப்பாடி பழனிசாமி பொறுப்புக்கு வருவதற்கு முன்பே நான் பல்வேறு பொறுப்புகளில் இருந்திருக்கிறேன். மூத்த நிர்வாகி என்ற முறையில் எனக்கு எடப்பாடி பழனிசாமி நோட்டீஸாவது அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் அந்த விதிகளை மீறி, சர்வாதிகார போக்கில் யாரை வேண்டுமானாலும் தூக்கி அடிக்கலாம் என்ற விதத்தில் எடப்பாடி பழனிசாமி செயல்படுவது வேதனை அளிக்கிறது. என்னை நீக்கும்போது திமுகவின் பி டீம் என்று கூறினார் எடப்பாடி பழனிசாமி. யார் பி டீம் என்பதை நாடறியும். நான் பி டீமில் இல்லை. எடப்பாடிதான் ஏ1 ஆக இருக்கிறார். பொய் சொல்வதற்கான நோபல் பரிசை திமுகவுக்குத் தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்வார். அப்படி துரோகத்திற்கான நோபல் பரிசை எடப்பாடி பழனிசாமிக்குத்தான் தர வேண்டும். ” என்றார்.

Summary

The Nobel Prize for betrayal should be given to Edappadi Palaniswami in Tamil Nadu. Former minister Sengottaiyan has stated that Edappadi Palaniswami has expelled him from the party in an authoritarian manner, without following the rules.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in