மக்களை ஏமாற்றுவதற்காகவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் | D Jayakumar |

தவெகவுடன் அதிமுக கூட்டணி சேருமா என்பது தேர்தலுக்கு முன் 2 அமாவாசைக்குள் தெரியும்...
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு
2 min read

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்றாலே ஒவ்வாமை கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களை ஏமாற்றுவதற்காகவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது:-

“முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருடைய தோழமைக் கட்சிகளை மட்டும் கூட்டிவிட்டு, அதன் அடிப்படையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றதாக மார்தட்டிக்கொள்ளும் செய்திகளை ஊடகங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். குறிப்பாக, சிறப்பு தீவிர திருத்தம் என்றால் மு.க. ஸ்டாலினுக்கு ஒவ்வாமை. அதில் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், மக்களைத் திசைதிருப்ப வேண்டும் என்ற நோக்கில் தவறான தகவல்கள் கொடுத்து, பெரிய அளவுக்கு வாக்குகள் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு திட்டமிட்டு ஒரு பொய் பிரசாரத்தை மு.க. ஸ்டாலின் அரங்கேற்றி வருகிறார்.

பொதுவாகவே தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் சுருக்க முறை திருத்தம், தீவிர சுருக்க முறை திருத்தம் ஆகியவற்றைச் செய்வது வழக்கம். அதேபோல, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்பெஷல் இன்டென்சிவ் ரிவிஷன் (SIR) என்று சொல்லப்படும் சிறப்பு தீவிர திருத்தத்தைச் செய்வது வழக்கம். ஜனநாயகத்தில் தகுதியுள்ள வாக்காளர்களுக்கு வாக்குரிமை மறுக்கக்கூடாது. இறந்தவர்கள் வாக்களிப்பதும், இருப்பவர்களுக்கு வாக்கு இல்லாத நிலையும் ஜனநாயகத்துக்கு கேலிக்கூத்து.

வெளிப்படைத் தன்மையோடும், உண்மைத் தன்மையோடும் வாக்களிக்கும் உரிமை எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முயற்சியை வரவேற்கிறோம். ஆனால் திமுக பயப்படுகிறது. இதிலிருந்தே, கள்ள ஓட்டு, இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள் மீதுதான் திமுக நம்பிக்கை வைத்திருக்கிறது என்பது தெரிகிறது. உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று இது வேண்டாம் என்று முறையிடப் போவதாக ஆர்.எஸ். பாரதி கூறுகிறார். அவர்கள் வேண்டாம் என்று முறையிடட்டும், நாங்கள் வேண்டும் என்று முறையிடுவோம்.

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதற்கு கொங்கு மண்டலத்தில் வாக்குகள் குறையும் என்று ஓ.பி.எஸ்., டி.டி.வி. சொன்னதற்கு எடப்பாடி பழனிசாமி நேற்றே விரிவான விளக்கத்தைக் கொடுத்துவிட்டார். அதிமுகவில் வாரிசு அரசியலோ குடும்ப அரசியலோ இல்லை என்பதுதான் உண்மை.

பிஹாரில் பேசும்போது பிரதமர் மோடி தமிழ்நாட்டில் திமுகவினர் பிஹாரிகளைத் துன்புறுத்துகிறார்கள் என்றுதான் சொன்னார். அவர் குறிப்பிட்டது திமுகவினரைப் பற்றிதான். அதைப்பற்றி முதல்வர் ஸ்டாலினிடம்தான் கேட்க வேண்டும். வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் அமைதியாக இருக்கிறார்கள் என்றால், அது ஜெயலலிதா காலத்தில் போட்ட விதை. ஏதோ திமுக ஆட்சியில் மட்டும்தான் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று கிடையாது.

தேர்தல் நடப்பதற்கு இன்னும் ஐந்து அமாவாசைகள் உள்ளன. அதுவரைதான் திமுகவால் ஆட முடியும். இருக்கும் ஐந்து அமாவாசைகளில் இரண்டு அமாவாசைக்குள் அதிமுக விஜயுடன் கூட்டணிக்குச் செல்கிறதா என்பது போன்ற கூட்டணி நிலைப்பாடுகள் தெரியவரும்.

சீமான் எங்கள் கட்சியை வசைபாடுகிறார். எங்களிடம் அவர் மோத வேண்டாம். ஜெயலலிதா மீது பாசம் கொண்ட அதிமுக தொண்டர்கள், வாய் வார்த்தைக்கு பதில் கொடுப்பார்கள். மனிதர் என்றால் ஆறறிவு கொண்டிருக்க வேண்டும். மாடுகளிடமும் மரங்களிடமும் ஆமைகளிடமும் பேசுபவரோடு நாம் பேச முடியுமா? சீமான் அவர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். ஊடகத்தில் பேசப்பட வேண்டும் என்பதற்காக அதிமுகவைத் தேவையில்லாமல் வசை பாடக் கூடாது” என்றார்.

Summary

Former Minister Jayakumar has criticized that Chief Minister M.K. Stalin, who has an allergy to the Special Intensive Revision. And he has conducted the all-party meeting only to deceive the people.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in