ரூ. 100 கோடி நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் தமிழக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினரால் இன்று (செப்.02) கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷுக்கும், அவரது மகள் ஷோபனாவுக்கும் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தைப் போலிப் பத்திரம் மூலம் அபகரித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கடந்த ஜூலை 16-ல் தமிழக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து கரூர் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார் விஜயபாஸ்கர். இந்த நிலமோசடி வழக்கில் விஜயபாஸ்கருடன், ஒரு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அதற்குப் பிறகு ஜூலை 30-ல் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது கரூர் மாவட்ட நீதிமன்றம்.
மேலும், இந்த நில மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மற்றொரு நபரான விஜயபாஸ்கர் சகோதரர் சேகர், இந்த நில அபகரிப்பு வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனக் குறிப்பிட்டு இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் சேகரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். இந்நிலையில் நில மோசடி வழக்கில் இன்று தமிழக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார் சேகர்.