கார்த்தி சிதம்பரம் Vs ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வார்த்தைப் போர்: நடந்தது என்ன?

நீங்கள் வெற்றி பெறுவதற்குக் கூட்டணி வேண்டும். ஆனால் மற்றவர்கள் வெற்றி பெறுவதற்கு கூட்டணி வேண்டாம் என்றால் அது சுயலாபம்
கார்த்தி சிதம்பரம் Vs ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வார்த்தைப் போர்: நடந்தது என்ன?
1 min read

காங்கிரஸ் கட்சியில் இருந்து கார்த்தி சிதம்பரத்தை நீக்க வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்பு கூறிய கருத்துக்கு, ` கட்சியில் இருந்து என்னை நீக்கச் சொல்வது வேடிக்கையாக உள்ளது’ என்று புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் பதிலளித்துள்ளார் கார்த்தி சிதம்பரம்.

`கட்சியில் இருந்து உங்களை நீக்க வேண்டும் என்று நேற்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். இது குறித்த உங்களின் கருத்து?’ என்று கார்த்தி சிதம்பரத்திடம் கேள்வியெழுப்பினார் புதிய தலைமுறை நிருபர்.

இந்த கேள்விக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், `இது வேடிக்கையாக இருக்கிறது. ஒரு வாரத்துக்கு முன்பு தமிழக காங்கிரஸ் தலைவர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் மாவட்டக் கூட்டத்தில் நான் கூறிய கருத்துக்கு 6 நாட்கள் கழித்து மூத்த தலைவர் இளங்கோவன் கருத்து சொல்வது எனக்கு வியப்பாக உள்ளது.

அவர் என் உரையை முழுமையாகக் கேட்டாரா என்பது எனக்குச் சந்தேகமாக உள்ளது. அவரது நீண்ட அரசியல் பயணத்தில் நிறைய ஏற்றத்தாழ்வுகளைப் பார்த்துள்ளார். அவர் கருத்துக்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை’ என்றார்.

கடந்த வாரம் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசிய கார்த்தி சிதம்பரம், `தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்காததால் காங்கிரஸை பலவீனமாக யாரும் எண்ணிவிடக்கூடாது. திமுக தலைமையில் கூட்டணி என்றாலும், 40 தொகுதிகளில் வெற்றி பெற காங்கிரஸும் காரணம்’ என்று பேசியிருந்தார்.

காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய கார்த்தி சிதம்பரத்தின் பேச்சை விமர்சித்து புதிய தலைமுறைக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், `இந்தக் கருத்தை கார்த்தி சிதம்பரம் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு கூறிவிட்டு தனியாகப் போட்டியிட்டிருக்கலாம். தேர்தல் முடிந்து நாடாளுமன்றத்தில் சௌரியமாக அமர்ந்து கொண்டு இந்தக் கருத்துகளைச் சொல்கிறார்.

நம் தொண்டர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டாமா. நீங்கள் வெற்றி பெறுவதற்குக் கூட்டணி வேண்டும். ஆனால் மற்றவர்கள் வெற்றி பெறுவதற்கு கூட்டணி வேண்டாம் என்றால் அது சுயலாபம். தேர்தலுக்கு முன்பு கார்த்திக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்று சிவகங்கை மாவட்டக் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தார்கள்.

ஆனால் பல எதிர்ப்புகளை மீறி சிதம்பரத்துக்காக வாய்ப்பு அளிக்கப்பட்டது. முழுக்க முழுக்க திமுகதான் அங்கே உழைத்தது. காங்கிரஸ்காரர்கள் யாரும் அங்கே வேலை செய்யவில்லை. இந்தக் கருத்துக்காக கார்த்தி சிதம்பரத்தைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும்’ என்றார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in