
மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் தகனம் செய்யப்பட்டது.
காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் பிரச்னைகளால், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று காலை உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் இன்று மாலை 4.45 மணி அளவில், முகலிவாக்கம் எல் & டி காலனியில் உள்ள மின் மயானத்திற்கு இளங்கோவனின் உடல் ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்பிறகு முகலிவாக்கம் மின் மயானத்தில் வைத்து, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் தலைமையில் 48 குண்டுகள் முழங்க, ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.