தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு தென் மாநிலங்களில் எந்தவொரு மாநிலத்திலும் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பீளமேட்டிலுள்ள பாஜக அலுவலகத்தைத் திறந்து வைத்து, ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றிரவு கோவை வந்தார். அவருக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் முன்னிலையில் பூரணக் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
கோவை, திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலுள்ள பாஜக மாவட்ட அலுவலகங்களை அமித் ஷா இன்று திறந்து வைத்தார். இந்த விழாவில் பேசிய அவர் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று தெரிவித்தார்.
"ஒடிஷாவில் முதல்முறையாக முழுப் பெரும்பான்மையுடன் 2024-ல் ஆட்சியமைத்தோம். பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஆந்திரப் பிரதேசத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உள்ளது. 2025 தில்லி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியுடன் 2026 பிறக்கும். திமுக தலைமையிலான ஊழல் அரசாங்கத்தை, தேசவிரோத ஆட்சியை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது.
சமுதாயத்தில் ஊழல் புரியும் அனைவரையும் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் மூலம் கட்சியில் இணைத்துவிட்டார்களோ என்றுகூட சில நேரங்களில் தோன்றும். உண்மையானப் பிரச்னைகளிலிருந்து திசை திருப்ப வேண்டும் என்பதற்காக மு.க. ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் பல்வேறு பிரச்னைகளை எழுப்புகிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு பற்றி ஒரு கூட்டத்தை நடத்துகிறார்கள். தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு தென் மாநிலங்களில் எந்தவொரு மாநிலத்திலும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படாது என பிரதமர் மோடி தெளிவுபடுத்திவிட்டார்.
மோடி அரசாங்கம் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்துவிட்டதாக தமிழ்நாடு முதல்வர் எப்போதும் கூறுகிறார். நீங்கள் நேர்மையானவர் என்றால், மக்கள் முன்பு நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளியுங்கள். 2004 முதல் 2014 வரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ரூ. 1,52,901 கோடியை வழங்கியுள்ளது. இதுவே மோடி அரசாங்கம் 10 ஆண்டுகளில் ரூ. 5,08,337 கோடியை தமிழ்நாட்டுக்கு விடுவித்துள்ளது. கூடுதலாக, உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ. 1,43,000 கோடியை மோடி அரசு விடுவித்துள்ளது" என்றார் அமித் ஷா.
முன்னதாக, அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாகக் கூறினார். மேலம், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கவுள்ளதாகக் கூறிய அவர், தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு தமிழ்நாட்டுக்கு 39 மக்களவை உறுப்பினர்களுக்குப் பதில் 31 மக்களவை உறுப்பினர்களே இருப்பார்கள் என விவாதத்தைத் தொடக்கி வைத்தார்.