40 எம்.பி.க்கள் எங்கே?: மீனவர்கள் பிரச்னை குறித்து இபிஎஸ் விமர்சனம்

"உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்."
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் பிடிபடும்போதும் கொல்லப்படும்போதும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியான நடவடிக்கை எடுக்காமல், கடிதம் மட்டுமே எழுதுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"பூம்புகார் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை ஒரு சில நாட்களுக்கு முன் 37 மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதன் காரணமாக பூம்புகார் துறைமுகத்தில் மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தன் தந்தை நாணய வெளியீட்டு விழாவிற்கு உங்களின் ஒரு வார்த்தை அழைப்பை ஏற்று , மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் வந்தார். ஒருவரின் மகிழ்ச்சிக்காக நடைபெற்ற கார் பந்தயத்திற்கு ஒரே நாளில் மத்திய தடையில்லாச் சான்றிதழ் பெற்றீர்கள். நடுகடலில் எழுதாத பேனா சிலை வைக்க மத்திய தடையில்லாச் சான்றிதழ் பெற்ற அதிகாரம் மிக்க நீங்கள், ஏன் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் பிடிபடும்போதும், கொல்லப்படும்போதும், உளமார்ந்த உறுதியான நடவடிக்கை எடுக்காமல், பெயரளவிற்குக் கடிதம் மட்டுமே எழுதுகின்றீர்கள்?

தமிழக மீனவர் பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையை விடியா திமுக அரசால் நிர்ப்பந்தித்து பெறமுடியவில்லை. தனக்கோ, தன்குடும்பத்திற்கோ தேவையென்றால், ஒரு நொடியில் சாதித்துக் கொள்ளும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக மீனவர்களுக்கோ, தமிழக நலனுக்கோ பாதிப்பு ஏற்படும்போது ஏனோதானோ என்று கடிதத்துடன் நிறுத்திக்கொள்கிறீர்கள்.

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள். இனியாவது விரைந்து செயல்பட்டு, மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து இலங்கை சிறையில் அடைபட்டுள்ள அனைத்துத் தமிழக மீனவர்களையும் விடுவிக்க பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்" என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மயிலாடுதுறையைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள். கடந்த 21 அன்று ரோந்துப் பணியிலிருந்த இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களைக் கைது செய்துள்ளார்கள். 37 தமிழக மீனவர்களைக் கைது செய்தது மட்டுமில்லாமல் 3 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படை பறிமுதல் செய்தது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கடிதம் எழுதினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in